முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி குற்ற விசாரணை பிரிவிற்கு வாக்கு மூலம் வழங்குவதற்கு சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமும் நிதிமோசடிகள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவருக்கு பின்னர் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்த நிலையில் அவர் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.பின்னர் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கடும் நிபந்தனைகளுடன் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷவின் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, நிதி மோசடிகளை ஆராயும் விசேட பொலிஸ் பிரிவுக்கு மாதம் ஒருமுறை சமுகமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ, அவரது கீழிருந்த திவிநெகும என்ற வறுமை ஒழிப்புத் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவருகின்றது.
இந்தப் பின்னணியிலேயே, காணிக் கொள்வனவு தொடர்பான புதிய குற்றச்சாட்டின் கீழ் அவர் இன்று மீண்டும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
