கடந்த ஆட்சிக்காலத்தில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட அரசு வங்கி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு, இலங்கை அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானத்திற்கு , இலங்கையின் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று இடைக்கால தடை உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.
இலங்கை வங்கி ஊழியர்களின் சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த பின்னர், நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஏ.கே. பண்டார தெரிவித்திருக்கிறார்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,கடந்த ஆட்சிக்காலத்தில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டதாக கூறி, ஆளும் கட்சிக்கு ஆதரவான ஊழியர்கள் 58 பேருக்கு பதவி உயர்வை வழங்க அமைச்சரவை தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
வங்கி சட்ட விதிமுறைகளுக்கு அமைய இவ்வாறு பதவி உயர்வுகளை அளிப்பதை அனுமதிக்க முடியாதென்று இந்த இலங்கை வங்கி ஊழியர்களின் சங்கம் தெரிவித்தது.
இவ்வாறு பதவி உயர்வுகள் நடைமுறை படுத்தப்பட்டால் அரசு வங்கி நிர்வாகத்தில் பெரிய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாக வழக்கறிஞர் எச்சரித்தார்.
இந்த கருத்துக்களை ஆராய்ந்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பதவி உயர்வுகள் வழங்குவதை எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை தடை செய்யும் உத்தரவை பிறப்பித்தது.
அன்றைய தினம் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்குமாறு பிரதமர் உட்பட அமைச்சரவையின் உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

