துருக்கியின் ஆட்சி அதிகாரத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிமுயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் ஜனாதிபதி டையின் எர்டோகன் அறிவித்துள்ளார்.
துருக்கியின் அரச தொலைக்காட்சியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள இராணுவம், நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் மற்றும் இராணு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
அத்துடன் துருக்கியின் அதிகாரம் சமாதானப் பேரவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், சமூக இணையத்தளங்களுக்கும் தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் முக்கிய நகரங்களில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுளள்துடன், போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகொப்டர்கள் துருக்கி தலைநகரின் பறந்துகொண்டிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம் துருக்கி புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், பொது மக்கள் கூடியிருந்த இடாமொன்றின் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துருக்கி பாராளுமன்றம் அமைந்துள்ள பகுதியிலும் இரண்டு வெடிச் சத்தங்கள் செவிமடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
ஜனாதிபதி டையிப் எர்டோகன் விடுமுறையைக் கழிப்பதற்காக மாமரிஸ் நகருக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த இராணுவ சதிமுயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த சதிமுயற்சியுடன் தொடர்புடைய நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என துருக்கி ஜனாதிபதி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஏற்பட்ட அசம்பாவிதங்களால் 60 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக பீ.பீ.சீ. உலக செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

