ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் தொடர்பான அடையாள அணி வகுப்பு இன்று நடைபெற்றது.
கல்கிசை மேலதிக நீதவான் லோசனா வீரசிங்க முன்னலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, கொலைச் சம்பவத்துக்குப் பின்னர் தன்னை மிரட்டியதாக கூறப்படும் சார்ஜன்ட் மேஜரை, லசந்த விக்ரமதுங்கவின் சாரதியால் அடையாளம் காட்ட முடிந்ததாக, லசந்த சார்பில் ஆஜரான சட்டத்தரணி அதுல எஸ்.ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொலை நடத்தன்று அதனை நேரில் பார்த்தவர்களை எதிர்வரும் 3ம் திகதி சாட்சியமளிக்க அழைக்குமாறு, கல்கிசை நீதவான் மொஹமட் சகாப்தின் இன்று உத்தரவிட்டார் எனவும் சட்டத்தரணி அதுல எஸ்.ரணவக்க கூறியுள்ளார்.
இதேவேளை, கொலை இடம்பெற்ற போது, தான் அணிந்திருந்த தலைக்கவசத்தை கழற்றியபடி, அங்கேயே பார்த்துக் கொண்டிருந்த நபரை, கண்ணால் கண்ட சாட்சி ஒருவரை, 3ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைத்துள்ளதோடு, அன்றையதினம் மீண்டும் விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ உறுப்பினரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சந்தேகநபர் ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான வழக்கு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இலங்கையின் பிரபல ஊடகவியலாளரான லசந்த விக்ரமதுங்க கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

