#சாய்ந்தமருது: தனியான பிரதேச சபை.நடக்குமா? கசக்குமா?



சாய்ந்தமருது தனியான பிரதேச சபை விவகாரம் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழு பைஸர் முஸ்தபாவுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளது.
கல்முனை மாநகர சபை எல்லைக்குள் வாழும் சாய்ந்தமருது மக்கள் தமக்கு தனியான பிரதேச சபையொன்று அமைத்துத்தரப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மஹிந்த அரசின் உள்ளூராட்சி , மாகாண சபைகள் அமைச்சராக இருந்த ஏ.எல்.எம். அதாவுல்லா, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் இறுதிக் கட்டத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி சாய்ந்தமருது பிரதேச சபைக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுத்திருந்தார்.
எனினும் அவ்வாறான வர்த்தமானி அறிவித்தல் மஹிந்தவின் ஆதரவை அதிகரிக்கும் என்ற அச்சம் காரணமாக மைத்தரி ஆதரவுத் தரப்பு மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோரின் தலையீட்டின் பேரில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த பொதுத் தேர்தலின் போது கல்முனையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அறிவித்திருந்தார்.எனினும் அதற்குப் பின்னர் குறித்த அறிவிப்பு தொடர்பில் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
உள்ளூராட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சாய்ந்தமருது மக்களின் வாக்குகளை கவரும் நோக்கில் தனியான பிரதேச சபை தொடர்பான ஊடக பம்மாத்துகளில் ஹக்கீம் மற்றும் ரிசாத் தரப்பு தற்போது களமிறங்கியுள்ளது.நேற்று முன்தினம் ரிசாத் தரப்பு இது தொடர்பில் உள்ளூராட்சி,மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தது.
இதனையடுத்து இன்று ஹக்கீம் தரப்பும் குறித்த விடயம் தொடர்பாக பைசர் முஸ்தபாவுடன் அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது.சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை அமைப்பது தொடர்பாக நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின்போ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர், உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுடன் இன்று முற்பகல் அவரது அமைச்சில் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலின் போது முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் இருந்து அமைச்சர் ஹக்கீமுடன், விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம். ஸல்மான், டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், கல்முனை பிரதி மேயர் ஏ.எல். அப்துல் மஜீத், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம். பிர்தௌஸ், ஏ.ஏ. பஸீர், ஏ. நசார்தீன், அமைச்சரின் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்ஸுர் மற்றும் உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்