போர்க்குற்றம் புரிந்தவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாதது



மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்பு கூறுவதற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் மன்னார், ஒட்டுசுட்டான், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் சனிக்கிழமை இடம்பெற்றன.
உண்மையைக் கண்டறிதல், நடந்தவைகளுக்கு நீதி வழங்குதல், இழப்புக்களுக்கான நிவாரணம், குற்றங்கள் மீள் நிகழாமை ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டதாக நல்லிணக்கப் பொறிமுறை அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. நாட்டு மக்களின் கருத்துக்களை உள்வாங்கி அதன் அடிப்படையில் இந்தப் பொறிமுறையை அமைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கருத்தறியும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த கருத்தறியும் அமர்வுகளில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பலரும் பொதுமக்களின் காணிகளிலும், மக்கள் குடியிருப்புக்களிலும் அமைந்துள்ள ராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
மக்கள் மத்தியில் ராணுவத்தினர் நிலைகொண்டிருப்பது நல்லிணக்கத்திற்குப் பாதகமானது என அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
போர்க்குற்றம் புரிந்தவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற தொனியில் முல்லைத்தீவில் நடைபெற்ற அமர்வொன்றில் கருத்து வெளியிட்ட முன்னாள் போராளி ஒருவர், புனர்வாழ்வு என்ற போர்வையில் தாங்கள் இரண்டு முதல் நான்கு வருடங்கள் வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்பே விடுதலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
தண்டனையுடன் கூடிய பொதுமன்னிப்பே எங்களுக்கு வழங்கப்பட்டது. இப்போது நாங்கள் மீண்டும் யுத்தத்தைப்பற்றி நினைத்துப் பார்க்கவில்லை. சமூகத்தில் இணைந்து சாதாரண மக்களுடன் அமைதியாக வாழவே விரும்புகிறோம். எனவே, இதுபோன்று போர் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார் அந்த முன்னாள் போராளி.
போர்க்குற்றச் சம்பவங்கள் நடைபெற்றதை ஒப்புக்கொண்டு சர்வதேசத்திடமும் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கேளுங்கள். அத்துடன் அந்த விடயத்தைக் கைவிட்டு விட்டு சமாதானவ வாழ்க்கையை வாழ்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.