நீதிமன்ற உத்தரவையடுத்து குழம்பிப் போயுள்ள கூட்டு எதிர்க்கட்சி!



கண்டியில் நாளை ஆரம்பிக்கப்படவிருந்த எதிர்ப்பு பாத யாத்திரையை, நீதிமன்ற உத்தரவையடுத்து கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழம்பிப் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவுக்குப் பணிந்து, பாத யாத்திரையை நகருக்கு வௌியே தொடங்கவுள்ளதாக, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லோகான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
குறித்த பாத யாத்திரையை கண்டி நகர எல்லைக்குள் ஆரம்பிக்க வேண்டாம் என, கண்டி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து நாளை மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை என்ன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
மேலும், நீதிமன்ற உத்தரவின்படி, தடை விதிக்கப்பட்டது, தனக்கும் மஹிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல, திலும் அமுணுகம ஆகிய நால்வருக்குமே என லோகான் ரத்வத்த சுட்டிக்காட்டியுள்ளார்.
மற்றைய அனைவரும் கண்டிக்குள் பிரவேசித்து தலதா மாளிகையில் வணங்கிவிட்டு, ஹெடம்பே விஹாரைக்கு அருகில் வர முடியும் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, கண்டி மற்றும் மாவனெல்லை நீதிமன்றங்களின் உத்தரவுக்கு அமைய, அந்த நகர எல்லைகளைப் பயன்படுத்தாது மாற்று வீதிகளூடாக தமது எதிர்ப்புப் பேரணியை முன்னெடுக்க முடியும் என, இதன்போது மஹிந்தானந்த அளுத்கமகே கருத்து வௌியிட்டுள்ளார்.