வக்பு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்துக்குரித்தான வக்பு சொத்துக்களை முறையாகப் பாதுகாத்து அவற்றை முகாமைத்துவம் செய்வதில் உள்ள குறைபாடுகளை இல்லாமற் செய்வதற்கு உதவும் வகையில் வக்பு சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக சட்டத்தரணிகளினதும், உலமாக்களினதும் ஆலோசனைகள் இதற்காகப் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
அதன் பின்பு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்பு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார்.
பெரும்பாலான வக்பு சொத்துகள் பள்ளிவாசல் நிர்வாகிகளினால் எவ்விதமான உடன்படிக்கைகளும் செய்து கொள்ளப்படாமல் வாடகைக்கும், நீண்டகால குத்தகைக்கும் விடப்பட்டுள்ளன.
மிகக் குறைந்த கட்டணத்துக்கு வாடகைக்கும், குத்தகைக்கும் விடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
எனவே உடன்படிக்கைகள் எதுவும் இல்லாமல் வாடகைக்கும் குத்தகைக்கும் விடப்பட்டுள்ள வக்பு சொத்துகளுக்கான உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுக் கொள்வதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் தாமதியாது உடன் செயற்படவேண்டுமெனவும் அமைச்சர் ஹலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை வக்புசபையின் செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்துவதற்கான சில பரிந்துரைகளை அமைச்சர் ஹலீமிடம் முன்வைத்துள்ளதாக வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம். எம். யாசீன் தெரிவித்தார்.
வக்பு சொத்துகள் முறையற்ற வகையில் கையாளப்படுகின்றமை மற்றும் ஊழல்கள் தொடர்பில் அதிகமான முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து வக்பு சபைக்கு கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

