இலங்கையில் கடந்த 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற கறுப்பு ஜுலை கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த 53 தமிழ் சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்டதை நினைவு கூர்ந்து இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தக் கலவரத்தின் போது, குட்டிமணி, தங்கத்துரை ஆகிய இரண்டு பேர் உள்ளிட்ட தமிழ் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களையும், ஏனைய வன்முறைகளின் போது கொல்லப்பட்ட சுமார் மூவாயிரம் பொதுமக்களுக்கும் இந்த நிகழ்வின்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.
வன்முறையாளர்களினால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலை என வர்ணித்திருந்தார்.
அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாத அளவில் இடம்பெற்ற கறுப்பு ஜுலை வன்முறைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உள்ளிட்ட சிங்களத் தவைர்கள் பின்னர் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரியிருந்தனர். அத்துடன் இத்தகைய வன்முறைகள் மீண்டும் இடம்பெறாது என உறுதியளித்தனர்.
இந்த அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜி லிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர, கறுப்பு ஜுலை கலவரத்தின் பின்னரும் தமிழர்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு வடிவங்களில் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டு, அவற்றுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றத்தக்க வகையில் அரசியல் தீர்வு ஒன்று விரைந்து காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

