இலங்கை அரசு தன்னைப் புறக்கணித்துள்ளதாக தான் கருதுவதாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற இலங்கையின் புகழ்பெற்ற ஓட்ட வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க கூறியுள்ளார். 2000 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் 200 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் சுசந்திகா ஜயசிங்க.
சிட்னி ஒலிம்பிக் முடிவடைந்து 16 வருடங்களான நிலையில், இலங்கை அரசினால் தனக்கு வழங்கப்பட வேண்டிய அங்கீகாரம் ஒருபோதும் கிடைக்கவில்லை எனவும் ஏ.எவ்.பி. செய்திச் சேவையிடம் அவர் தெரிவித்துள்ளார்.
சிட்னி ஒலிம்பிக் போட்டியின் 200 மீற்றர் ஓட்டத்தில் சுசந்திகாவுக்கு முதலில் வெண்கலப் பதக்கமே கிடைத்தது.
எனினும் அப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை மேரியன் ஜோன்ஸ் ஊக்கமருந்து பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டதால் அவரின் தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது.
அதையடுத்து 2007 ஆம் ஆண்டு சுசந்திகாவுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போது 40 வயதான சுசந்திகா தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்வதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.

