மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரகசியத்தை கட்சியை பாதுகாக்க ஜனாதிபதி பயன்படுத்தக் கூடாது என, பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அனுர குமார மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பந்துல குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும அமைப்பாளர் பதவிகளில் இருக்கின்றனரா இல்லையா என்பது, நாட்டு மக்களுக்கு தேவையான பிரச்சினை இல்லை.
மே மாதம் காலிக்கா கிருலப்பனைக்கா செல்வது என்பது குறித்தும், அதன் பின்னர் கண்டியில் இருந்து கொழும்புக்கு மேற்கொள்ளப்பட்ட பாதயாத்திரை தொடர்பிலும் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன. தற்போது மாநாட்டுக்கு வருவார்களா இல்லையா என்பது குறித்து சர்ச்சையை ஏற்படுத்த முற்படுகின்றனர்.
எமது நாட்டு அரசியல் என்பது இதுபோன்ற சர்ச்சைகள் அல்ல. நாட்டின் உண்மையான அரசியல் கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தப்படுவது இல்லை. நாட்டு மக்களுக்கு தேவையான விடயங்களை புறந்தள்ளி தேவையற்ற விடயங்கள் குறித்த பேச்சுக்களை மேலெலுப்ப முற்படுகின்றனர்.
ஷிராந்தி ராஜபக்ஷவின் மோசடி ஒப்பந்தங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவரைக் கைதுசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும், அது நடைபெறவில்லை. சுற்றுலா சபை மோசடி ஒப்பந்தம் குறித்து கைதுசெய்ய பெயரிடப்பட்ட நால்வரும் வௌியில் உள்ளனர். தற்போதைய அராங்கத்தில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர்கள் வௌியில் உள்ளனர். கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோடிகளுடன் தொடர்புடைய சிலர் தற்போது அமைச்சர்களாக பதவி வகிக்கின்றனர். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சில விசாரணைகளுக்கு அதிக அலுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. அதனால் நாம் ஊழல் மோசடி குறித்த விசாரணைகளில் திருப்தி அடையவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரகசியங்களை அம்பலப்படுத்துவதாக கூறியது மஹிந்த ராஜபக்ஷ பற்றியதே என்பது எமக்கு தெளிவாகவுள்ளது.
அது ராஜபக்ஷவின் குடும்பப் பிரச்சினையாக அல்லது காணிப் பிரச்சினையாக இருந்தால் அதனால் எமக்கு சிக்கல் இல்லை.
ஆனால், ஜனாதிபதி மறைத்து வைத்திருப்பது நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரகசியம் என நாம் நினைக்கின்றோம். அவ்வாறான இரகசியத்தை ஜனாதிபதி கட்சியை பாதுகாக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை, அதனை வௌியிட வேண்டும் என, அனுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

