பெருமளவிலான கடல் அரிப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஒலுவில் மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் கடல் அரிப்பை தடுக்க நீண்ட கால மற்றும் குறுகிய கால திட்டங்களை நடைமுறைப்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இன்று புதன்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தகவல் துறை அமைச்சர் கயந்த கருணாதிலக அறிவித்தார்.
பல வருடங்களாக கடல் அரிப்புக்குள்ளாகி வரும் இந்த பிரதேசங்களில் ஒலுவில் துறைமுகத்திற்கு வடக்கே 550 மீட்டர் கடல் அரிப்புக்குள்ளாகியிருப்பதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
150 மீட்டர் பகுதியை பாதுகாப்பதற்கான பணிகள் ஏற்கனவே துறைமுக அபிவிருத்தி வாரியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் '' கடல் அரிப்பை தடுப்பதற்கு நீண்ட கால மற்றும் குறுகிய கால வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது.பாதுகாப்பு செயன்முறையொன்றை செயற்படுத்துவதற்கு கால தாமதம் ஏற்படுவதால் அதுவரை குறுகிய கால தீர்வாக கடற்கரை பகுதியில் மண் மூட்டைகளினால் பாதுகாப்பு சுவர்களை அமைத்தல் மற்றும் கருங்கல் அணைகளை அமைத்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவது என கூறப்பட்டுள்ளது
'கடலோர பாதுகாப்பு மற்றும் கடற்கரை வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்த துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுண ரணதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

