சிங்கள மொழியை கற்றால் நாம் புறக்கணிக்கப்படுவோம் என்ற கூற்று தவறு



வடகிழக்கு மாகாணங்களுக்கு உரிய உரித்துக்கள் தரப்படாது மத்தியினுடைய அதிகாரம் இந்த இரு மாகாணங்களில் ஊடறுத்துச் செல்லும் நிலை தொடர்ந்தால் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படும் ஒரு நிலை ஏற்படக் கூடும். என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்.மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு இறுதிநாள் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஒரு தமிழ் மகன் சிங்களத்தையும்,ஆங்கிலத்தையும் நன்றாகப் படித்தால்த்தான் சிங்கள மக்களுக்கு தனது குறைகளை, எதிர் பார்ப்புக்களை, தேவைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறக் கூடியதாக இருக்கும். வெறுமனே தமிழில் பாண்டித்தியம் பெற்று தமிழ் மக்களிடையே எமது கருத்துக்களை கொண்டு செல்வதால் அவை இங்கேயே தேங்கியிருக்கின்றன.ஒரே நாட்டிற்குள் எம்முடைய தனித்துவத்தைப் பேணிக்கொண்டு ஒருமித்து வாழப் போகின்றோம் என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோமானால் எமது சகோதர மொழியையும் ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்து கொள்ளுதல் மிக அவசியம். எம்முடைய இரு இனங்களுக்கிடையே இருக்கும் சந்தேகங்கள், வெறுப்புக்கள், புரிந்துணராமை போன்றவை மற்றையவரின் மொழியை நாம் தெரிந்து கொள்வதால் அவை இல்லாதாக்கப்படுகின்றன. அல்லது இல்லாதாக்கப்படுவதற்கு வழிவகுக்கின்றன. ஆகவே சகோதர மொழியைக் கற்பதால் சகோதர மக்களிடையே நிலவும் எம்மைப்பற்றிய அபிப்பிராயங்களை நீக்க அது உதவி புரிகின்றது. எம்முடைய மொழியை நன்றாகப்படித்துப் பேணிப் பாதுகாத்து வரும் அதே நேரத்தில் பிறிதொரு மொழியில் பாண்டித்தியம் பெறுவது பிழை என்று கூற முடியாது.