யாழ். சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் என தெரியவந்த மூவரையே கொழும்பு குற்றப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கடந்த வருடம் மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் பின்னரான ஆர்ப்பாட்டத்தின் போது, யாழ். நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலவரத்தில் யாழ். நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் மீதான தாக்குதலின் போது, நீதிமன்ற வளாகத்தில் நின்ற சிறைச்சாலை வாகனத்தின் மீதும் இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து புகைப்பட மற்றும் காணொளிகள் என்பவற்றின் மூலம் தெரியவந்ததன் பின்னரே மூவரையும் இன்று செவ்வாய்க்கிழமை யாழ். நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொழும்பு குற்றப் பிரிவினர் பிடித்துச் சென்றுள்ளனர்.
குறித்த மூவரையும் யாழ். பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகள் மேற்கொண்டதன் பின்னர் கொழும்பு குற்றப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

