ஏறாவூர் இரட்டைக் கொலை சம்பவத்தின் சூத்திரதாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று கைது செய்யப்பட்ட கொலையாளிகளை காண்பிக்குமாறும்,அல்லது தங்களிடம் ஒப்படைக்குமாறும் ஏறாவூர் பொதுமக்கள் பொலிஸ்நிலையம் முன்பாக ஒன்றுதிரண்டுள்ளதையே இங்கு காண்கிறீர்கள்!
குறித்த கைது செய்தி அறிந்த பொதுமக்கள் சந்தேகநபர்களை பார்ப்பதற்காக பொலிஸ் நிலைய வளாகத்தில் சூழ்ந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அங்கு வந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சுபைர் ஆகியோர் பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர்.
ஏறாவூர் நகரில் கடந்த 11ஆம் திகதி இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளையடுத்து ஏறாவூரின் நகர மத்தியில் மறைந்திருந்த கொலைச் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த 4 பேர்களில் கொலை செய்யப்பட்ட 31 வயது பெண்ணின் கணவரின் சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவத்தில் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள பெண்ணின் கணவர் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது

