படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 16 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஊடக சுதந்திரத்தினை நிலைநாட்டுங்கள் என்னும் தொனிப்பொருளில் யாழ் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
யாழ் ஊடக அமையத்தின் தலைவர் தயாபரன் தலைமையில் வடக்கு, கிழக்கு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
படுகொலையான மற்றும் காணமால்போயுள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச அமைப்புக்கள் முன்னிலையினில் காலதாமதமின்றி விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும், ஊடகவியலாளர்கள் தமது பணிகளை ஆற்றுவதற்கான சுதந்திரத்தை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தல் வேண்டும், தகவல் அறியும் உரிமை சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதில் வடமாகாண சபையின் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், அகில இலங்கை மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

