நீலப்பசுமை யுகத்தை இலங்கையில் உருவாக்குவதற்கான பிரதான நிகழ்வு



இலங்கையில் நீலப்பசுமை யுகமொன்றை உருவாக்குவதற்கான பிரதான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது ஜனாதிபதி தெரிவித்ததாவது,
2017 ஆம் ஆண்டை வறுமையை ஒழிக்கும் ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளோம். அரசாங்கத்தினால் அடுத்த வருடத்திற்காக முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் இதற்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன், தேவையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமையை அனைவரும் அறிவார்கள். வறுமை ஒழிப்பு தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையை அடுத்த வருடம் நடைமுறைப்படுத்தும் போது, நிரந்தர அபிவிருத்திக்கும் முன்னுரிமை வழங்கி செயற்படுவதே எமது முதன்மை நோக்கமாகும். நிரந்தர அபிவிருத்தி என்ற எண்ணக்கருவிற்குள் புவி வெப்பத்தைக் குறைப்பது தொடர்பான ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் கொள்கை தொடர்பான இணக்கப்பாட்டை இணைத்து ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக முன்னேற்றமடைய முடியும்.
என்றார்.
இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் உனா மெக்கோலியினால் பசுமை காலநிலை நிதியத்தில் இருந்து 38.18 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டது.