பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி நேற்று முன்தினம் உயிரிழந்த யாழ்.பல்கலை மாணவர்களுள் ஒருவரான, கிளிநொச்சியைச் சேர்ந்த நடராஜா கஜனின் இறுதிக்கிரியைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இன்று காலை 9.30 மணிக்கு அவருடைய இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று, இறுதி ஊர்வலத்தை தொடர்ந்து, பாரதிபுரம் மயானத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் அவரது உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மாணவனின் இறுதி ஊர்வலத்தில், அரசியல் பிரமுகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அலையென திரண்டு வந்திருந்தனர்.
மாணவனின் இறுதி ஊர்வலம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில், குறித்த மாணவர்களின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கவேண்டுமென்பதை வலியுறுத்தி பதாதைகளை தாங்கியவாறு அமைதியான கவனயீர்ப்பு போராட்டமொன்றும் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, வட மாகாண அமைச்சர் த.குருகுலராஜா அஞ்சலி உரையாற்றியபோது, அரசியல்வாதிகளின் உரைகள் எவையும் இடம்பெறக்கூடாதென யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அரசியல்வாதிகளின் உரைகள் யாவும் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

