களுவாஞ்சிக்குடி இளைஞர்கள் மீது தாக்கிய சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல்





(ரவிப் பரியா)

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம், மகிழூர் கிராமத்தினைச் சேர்ந்த பொன்னம்பலம் யசோதரன்(பிரதிப்) எனும் இளைஞன் மீது புதன் மாலை (19.10.2016) இனம்தெரியாத நபர் இருவரினால் கொலைமுயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதன்போது  யசோதரன் மற்றும் தடுக்கச் சென்ற அவருடைய அண்ணன் பொன்னம்பலம் உதயசங்கர்; ஆகிய  இருவரும் பலத்த காயங்களிற்குள்ளாக்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது பொன்னம்பலம் யசோதரன் நேற்று மாலை 7.00 மணியளவில் தனது வீட்டில் இருந்த வேளை வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் வருகை தந்திருந்த இருவர் தாங்கள் ரகசிய விசாரணைப்பிரிவில் இருந்து வருகை தந்திருப்பதாகவும் வெளியில் வரும்படியும் கூறியிருக்கின்றனர்.


வெளியில் செல்ல யசோதரன் மறுத்த வேளையில் வீட்டினுள் நுழைந்து சரமாரியாக கூரிய ஆயுதங்களால் தாக்கியிருக்கின்றனர், இதனைத் தடுக்கச ;சென்ற அவருடைய அண்ணன்  உதயசங்கரும் ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 

இவ்வாறு தாக்கும் பொழுது வீட்டில் இருந்தவர்கள் கதறலினால் பயந்து தப்பியோடிய சந்தெகநபர்களை இளைஞர்கள் சிலர் பின்தொடர்ந்து விரட்டி செல்கையில், அவர்கள் ஓந்தாச்சிமடத்தில் விபத்துக்குள்ளான நிலையில், பின்தொடர்ந்த இளைஞர்களினால் வீதிப்போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளிற்கு விடயம் அறியத்தரப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தற்போது களுவாஞ்சிகுடிப் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர்கள்; தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்  மத்தியகிழக்கு நாட்டிற்கு வேலைக்காக சென்று விடுமுறைக்காக நாடுதிரும்பியிருந்தார்.

விடுமுறை நிறைவுற்று நாளை மீண்டும் வெளிநாடு  செல்லவிருந்த நிலையில் இவ்வாறான கொலைமுயற்சி இடம்பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இன்று மாலை குறித்த சந்தேகநபர்கள் களுவாஞ்சிக்குடி சுற்றுலா கௌரவ நீதவான் றிஸ்வி முன்னிலையில்  களுவாஞ்சிகுடிப் பொலிசார் சந்தேக நபர்களை ஆஜர்படுத்தினர்.பிணை வழங்கக் கோரி, சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி திருமதி.தாரிணி ஆஜரானரா். பாதிக்கப்பட்ட நபர்கள் ஆஜரான சட்டத்தணி எம்.ஐ.உவைசுர்ரஹ்மான்  இது மிலேச்சத்தனமாக, திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை முயற்ச்சி  எனவும் பிணை வழங்குவதற்கு தனது ஆட்சேபனையும் தெரிவித்திரு. சந்தேக நபர்களிடமிருந்து, இராணுவ உடை, கிரண்டைர் கத்தி போன்றவை கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெிவித்திருந்தனர்.விசாரணை முடிவடையாததால் எதிர்வரும் 3 திகதி வரை சந்தேக நபர்களை  விளக்க மறியலில் வைக்குமாறு  நீதவான் உத்தரவிட்டார்.