ஏ.எல். நௌபீர்
BA, PG Dip in Applied Sociology, Dip in English.
BA, PG Dip in Applied Sociology, Dip in English.
கல்விக்கும் - வறுமைக்கும், கல்விக்கும் - பணத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. முதலாளித்துவத்தின் கோர முகம் கல்வி மீதும் பதிந்தே உள்ளது. கல்வி பணம் படைத்தவன் மட்டுமே பெறும் ஒரு வளமல்ல. கல்வியானது பணம் படைத்த மேட்டுக்குடி சமூகத்தினது தனியுரிமைச் சொத்து என்றொரு காலம் இருந்தது. இன்று அவ்வகை நிலை உலகில் குறைந்து வருகிறது.
யுகங்கள் பல கடந்து மனிதன் நவீன யுகத்தில் வாழ்ந்து வருகிறான். விவசாய யுகம் (Green era), கைத்தொழில் யுகம் (Blue era), அறிவு யுகம் (Knowledge era) என காலம் கடந்தே போய்விட்டது. கல்வியை வறுமை பாதித்து வருவதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்து உள்ளது.
வறுமை காரணமாக அதிகமான மக்களால் கல்வி அடையப்பட முடியாமல் போனமையே அதை இலவசமாக வழங்க வேண்டும் என இலங்கை உட்பட உலகின் பல அரசுகள் சிந்திக்கத் தொடங்கின.
எமது நாட்டிலும் இலவசக் கல்வியின் தந்தை c.w.w. கன்னங்கர அவர்களால் இலவசக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டதும் இந் நன் நோக்கினாலேயே ஆகும்.
கற்றல் வறுமைக்குத் தடையா? வறுமையோடு போராடும் மனிதர்கள் குறிப்பாக, இளமைப் பருவத்திலும் மாணவப் பருவத்திலும் கல்வியிலிருந்து இடையில் சறுக்கி விழுவதற்கு வறுமை ஒரு காரணமாக இருக்கின்றது. விதிவிலக்காக வறுமையோடு போராடிக் கொண்டே அதன் பொறியில் சிக்கி விடாது, தன்னம்பிக்கையோடு தடைகளைத் தாண்டிச் சென்று முன்னேறியவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
உலகில் மிகப் பெரும் சாதனைகளை நிகழ்த்தியவர்களும் பரந்தளவிலான செல்வாக்கைப் பதித்தவர்களும் வறுமையோடு பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். வாழ்க்கைக்குக் குறுக்காக வறுமை நின்ற தருணத்தில் அதனைக் கடந்து சென்று காலத்தால் அழியாத சாதனையை எதிர்கால சந்ததியிடம் கையளித்துச் சென்றுள்ளனர்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன், வாழ்வின் அரைவாசியை சிறையில் கழித்து தென்னாபிரிக்காவில் ஜனாதிபதியாய் தலைநிமிர்ந்த நெல்சன் மண்டேலா, துருக்கியின் இன்றைய ஜனாதிபதி ரஜப் தையிப் அர்தூகான் என்று அவர்களுக்கு ஒரு பட்டியலே உள்ளது. அவர்களைப் பொறுத்தவரை பாறைகளின் இடுக்கில் முளைத்தது செடியல்ல நம்பிக்கை.
தன்னம்பிக்கையுள்ள மனிதனுக்கு தான் பிறந்த குடும்பம் குறித்தோ நோய் குறித்தோ வறுமை குறித்தோ எந்தப் பயமும் இல்லை. தயக்கமோ தாழ்வு மனப்பான்மையோ இல்லை. அதனால்தான் வறுமை பலரை வார்த்தெடுத் துள்ளது.
வறுமையில் பிறப்பது நமது தவறல்ல. வறுமையோடு இறப்பதே நாம் செய்யும் மகா தவறு.
வறுமை நேர்மையாளனின் நண்பன். வாழ்ந்து காட்டியவர்களின் கைத்தடி. வீரம் மிக்கவர்களின் விளை நிலம். சோம்பேறிகளின் ஊக்க மாத்திரை.
இந்திய அரசியலில் 1930 களில் பேசப்பட்ட ஓர் ஆளுமையே சீனிவாச சாஸ்த்திரி. இவர் இந்திய நாட்டின் பிரதிநிதியாக லண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டவர். பலமுறை அவரது ஆங்கில மொழிப் புலமையைக் கண்டு ஆங்கிலேயர்களே மலைத்துப் போனார்கள். ‘வெள்ளி நாக்கு’ கொண்டவர் என போற்றப்பட்ட அவர், மாணவப் பருவத்தில் கடும் வறுமையை எதிர்கொண்டவர். உண்பதற்கு, உடுப்பதற்கு திராணியற்று தட்டழிந்தவர். அவரது பெற்றோர் மிகவும் வறியவர்கள். பாடசாலை செல்லும் காலத்தில் உண்பதற்கும் உடுப்பதற்கும் வழியில்லாது திண்டாடியவர். ஆனால், அவரது வறுமை அவரது கல்விக்கு எந்தவகையிலும் தடையாக இருப்பதை அவர் அனுமதிக்கவில்லை. அவர் ஒரு நாள் மேல் சட்டையை அணியாமலேயே பாடசாலை சென்றுவிட்டார். அதைக் கண்ணுற்ற பாடசாலை அதிபர் எட்டணா அபராதம் விதித்து விட்டார். ஏன் மேல் சட்டை அணியாமல் வந்தீர் என்று விசாரித்தார். அப்போது எனக்கு ஒரேயொரு மேல்சட்டைதான் உள்ளது. அது நேற்று மழையில் நனைந்து விட்டது. அதனால் சட்டையில்லாமலே வந்துவிட்டேன். எட்டணா என்னிடமிருந்தால் புதிதாக நானே சட்டையொன்றை வாங்கியிருப்பேனே என்று புத்திசாதுரியமாய் பதில் தந்தார்.
அதைக் கேட்ட பாடசாலை அதிபர் தனது சட்டைப் பையிலிருந்து ஒரு ரூபாவை சாஸ்திரி யிடம் நீட்டினார். இதைக் கொண்டு ஒரு சட்டை யை வாங்கிக்கொள் என்றார்.
இப்படி வறுமையோடு போராடிய மனிதர்கள் தன்னம்பிக்கையினாலும் இலட்சிய வேட்கை யினாலும் பிற்காலத்தில் உயர்ந்து நின்றார்கள் என்பதற்கு உதாரணங்கள் ஏராளம். எனவே மாணவப் பருவத்திலுள்ளோர் தமது பெற்றோரின் வறுமையை எண்ணி மனம் வருந்த வேண்டியதில்லை. எல்லா வசதிகளோடும் இருப்பவர்கள் தேவை உணர்ந்து கற்பதில்லை. வசதி வாய்ப்பு எதுவுமற்றவர்கள் அதைப் பெறுவதற்கான கருவியாக கல்வியைப் பயன்படுத்துவர்.
கற்றல் ஒரு வாய்ப்பாகும். எனவே பாடசாலைக் காலங்களில் நாம் எதிர்கொண்டுள்ள வறுமையை விரட்டியடிப்பதற்கு கற்றலையே ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும். வறுமை கல்விக்கு எந்த வகையிலும் தடையல்ல. முன்னொரு காலத்தில் நிலச் சுவாந்தர்களும், கைத்தொழில் சாலைகளுக்குச் சொந்தக்காரர்களுமே மக்களால் கணக்கிலெடுக்கப் பட்டார்கள். இன்று யாரிடம் கல்வி அறிவுள்ளதோ அவரே ஒரு சொத்துடையவராக மதிக்கப்படுகிறார். இது அறிவுப் பொருளாதார யுகம் (Knowledge economy era) எனவே கல்வியைத் தேடிப் படிப்போம். வறுமை அதற்கான தடை அல்ல என்பதை நம்புவோம். எனக்குள் இருக்கும் வறுமையை கல்வி என்ற மூலதனத்தின் மூலம் எடைத்தெறிவோம். எந்த சொத்துக்களும் எம்மிடம் இல்லாதிருந்தாலும் கல்விச் சொத்தை நாடிப் பெறுவோம். எமது இளம் சமூகத்தை கல்வி வாய்ப்புக்கள் மீது ஊக்கப்படுத்தி வறுமையை முற்றாக ஒழிப்போம். கல்வியை அக்கறையுடன் பெறுவதால் வறுமை தோற்றுப் போகும்.

