(Mohammed Asmy)
போதைப் பொருள் பாவனையற்ற இளைஞர் சமுதாயம் என்ற தொனிப் பொருளிலில் ஏறாவூரில் உள்ள பொது அமைப்புக்கள், அரச நிறுவனங்கள் , பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்கள் என்பன இணைந்து ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தலைமையில் பல்வேறு சமூக சீரழிவுகளை ஏற்படுத்தும் போதைப் பொருள் பாவனையை ஏறாவூர் மண்ணில் இருந்து ஒழிக்கும் முகமாக பல்வேறு தொடர் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் அதன் ஒரு அங்கமாக போதைப் பாவனைக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நாடளாவியவேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஏறாவூர் பொதுமக்களிடம் கையொப்பங்கள் சேகரிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை ஏறாவூர் பிரதான வீதி பஸ் நிலையம் அருகில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது போதைப் பாவனை தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை முச்சக்கரவண்டிகளுக்கு ஒட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
ஏறாவூர் பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் ஏ.சி.எம் சயீட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பிரதான நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா, மாகாண சபை உறுப்பினர் சுபையிர் மற்றும் முன்னாள் அமைச்சர் பஸீர் சேகுதாவுத் , பிரதேச செயலாளர் ஹனீபா ,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க பீரிஸ் உட்பட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,அரச அலுவலர்கள்,ஆட்டோ சாரதிகள் , விளையாட்டு கழக பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.

