அக்கரைப்பற்றில் குரு பிரதீபா பிரபா விருதுபெற்ற ஆசிரியைக்குப் பாராட்டு




-எஸ்.ரி.ஜமால்டீன்-
கல்வி அமைச்சு கல்வி புலத்தில் பணியாற்றி வருகின்ற அர்ப்பணிப்பு மிகு அதிபர் ஆசிரியர்களை தெரிவு செய்து ஆண்டு தோறும் ஒக்டோபர் மாதம் சர்வதேச ஆசிரியர் தினத்தன்று குரு பிரதீபா பிரபா விருது வழங்கி கௌரவித்து வருகின்றது.

அந்த வகையில் இவ்வருடம் (2016) குரு பிரதீபா பிரபா விருது வழங்கி கௌரவிக்கும் தேசிய மட்ட நிகழ்வு இம்மாதம் 5 ஆம் திகதி கொழும்பு தாமரை தடாகத்தில் இடம் பெற்றது.இதன் போது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் தமிழ்ப்பாடம் கற்பிக்கும் திருமதி ஏ.எல்.நஸீபா இக்பால் என்ற ஆசிரியையும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். 

மேற்படி விருது பெற்ற  ஆசிரியையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அவர் கற்பிக்கும் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் நேற்று  வியாழக்கிழமை (20.10.2016) கல்லூரி அதாஉல்லா கேட்போர் கூடத்தில் கல்லூரி அதிபர் எம்.எம்.எம்.மீராசாஹிப் தலைமையில் நடைபெற்றது. 

விருது பெற்ற நஸீபா ஆசிரியை மாலை அணிவிக்கப்பட்டு கல்லூரியின் நுழைவாயிலிலிருந்து பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு பாடசாலை சமூகத்தினரால் அழைத்துவரப்பட்டார். 

இந்நிகழ்வில் கல்லூரியின் ஆசிரியர்கள்,மாணவர்கள் பலர் நசீபா டீச்சரை பாராட்டி உரையாற்றினர்.

இதன்போது நஸீபா ஆசிரியை பற்றி கவிஞரும் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளருமான எம்.எஸ்.அபுல் ஹஸன் எழுதிய வாழ்த்துப்பா ஏ.எம்.ஹம்ஸாத் ஆசிரியரினால் வாசிக்கப்பட்டு பிரதி அதிபர் யூ.எல்.மன்சூர் அவர்களினால் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் குழாத்தினால் பொன்னாடை போர்த்தி பொற்கிளியும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். தரம் 10, 11 வலயப் பொறுப்பாசிரியர்கள் மற்றும் மாணவர்களால் பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வில் விருது பெற்ற நசீபா டீச்சரின் சிறிய தந்தைகளான ஓய்வுபெற்ற  அதிபர் திலகம் எம்.ஏ.உதுமாலெப்பை, எம்.ஏ.அப்துல் கபூர் அவர்களுடன் நசீபா டீச்சரின் கணவரும் கல்லூரியின் பிரதி அதிபருமான எம்.இக்பால் அவரின் சகோதரி உட்பட குடும்ப உறுப்பினர்களுடன்  ஆசியர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.