20% பணக்காரர்களுக்காக 80% மக்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துவது வருத்தம் அளிக்கிறது



20 சதவீத பணக்காரர்களுக்காக 80 சதவீத மக்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துவது வருத்தம் அளிக்கிறது என்று நடிகர் விஜய் ஆதங்கத்துடன் கூறினார்.
சென்னை வடபழனியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''500, 1000 ரூபாய் நோட்டுத் தடை செய்துள்ள மத்திய அரசின் இந்த முடிவு நல்ல முடிவு. இது நிச்சயமாக நம் நாட்டுக்குத் தேவையான, யாரும் யோசிக்க முடியாத, துணிச்சலான முடிவு. இது கண்டிப்பாக நாட்டின் வளர்ச்சியை முன்னேற்றும் என்பது உறுதி.
ஆனால் இந்த பாதிப்புகள் அதிகமாகியிருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. சிறு தொழில் செய்யும் வியாபாரிகள், முதியவர்கள் பலரும் இதனால் பாதிப்படைந்து வருகின்றனர். செய்திகளில் பல விஷயங்களை பார்த்து வருகிறேன். மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. இந்த முடிவை மத்திய அரசு எடுப்பதற்கு முன்பு, பின் விளைவுகள் குறித்தும் யோசித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சில விஷயங்களை தவிர்த்திருக்கலாம்.
வெளியூர் சென்ற பலர் வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். தன்னுடைய பேத்தியின் திருமணம் நடக்காததால் ஒரு பாட்டி தற்கொலை செய்து கொண்டது, மருத்துவமனையில் பணம் வாங்காததால் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை என்பதெல்லாம் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. யாரும் யோசிக்க முடியாத அளவுக்கு பெரிய புரட்சிதான் இது. மருந்து வாங்குபவர்கள் கூட அவதிப் பெற்று வருகின்றனர். இதுபோன்ற சில இக்காட்டன சூழ்நிலைகளை தவிர்த்திருக்கலாம்" என்றார். 20 சதவீத பணக்காரர்களுக்காக 80 சதவீத மக்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துவது என்று நடிகர் விஜய் வருத்தம் தெரிவித்தார்.