மத்திய வங்கியின் முறிகள் விநியோகத்தின் போது இடம் பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் பிரதமரையும் விசாரணைக்குபட்டுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த எதிர்கட்சி இன்று (31) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் 11 உறுப்பினர்கள் 7 ஆவணங்களுடன் இன்று முற்பகல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தனர்.
முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான கோப் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சாட்சியங்கள் மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை உள்ளிட்ட 7 அறிக்கைகளை அடிப்படையாக வைத்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பிரதமர் ஆலோசனை வழங்கியதாக அர்ஜூன் மகேந்திரன் கோப் குழுவிடம் சாட்சியம் வழங்கியிருந்ததாகவும் ஒன்றிணைந்த எதிர் கட்சியின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான கோப் அறிக்கையின் சாட்சி விசாரணைகளின் போது மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் பி.என். வீரசிங்க சாட்சி மூலம் இது உறுதியாவதாகவும் ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
பிரதமருக்கு இந்த கொடுக்கல வாங்கலுடன் சம்பந்தம் இருக்கின்றதா என்பது தொடர்பில் விசாரணை செய்யுமாறும் இதன் மூலம் பெற்றுக் கொண்ட அனைத்து சொத்துக்களையும் அரசுடமையாக்குமாறும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட அனைத்து பிரதிவாதிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிணைந்த எதிர்கட்சி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

