மஹிந்த ராஜபக்ஷவுடன் நரிகள் இருபதனால்தான் அவர் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். இந்த நரிகளினாலேயே நான் தொடர்ந்தும் சிங்கமாக செயற்படுகின்றேன்” என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான டீ.ஏ. ராஜபக்ஷவின் நினைவு தின நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை அங்கிருந்த ஏற்பாட்டாளர்கள் கூக்குரல் இட்டு வெளியேற்றிய சம்பவமொன்று இன்று (17) நடைபெற்றது.
மஹிந்த ராஜபக்ஷ எம்.பி.யின் தலைமையில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேர்வின் சில்வாவுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்புக் கிடைத்தே வருகை தந்ததாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இருப்பினும், ஏற்பாட்டுக் குழுவினாலோ, மஹிந்த ராஜபக்ஷவினாலோ அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென கூறப்படுகின்றது.
நிகழ்வுகள் ஆரம்பிக்கவிருக்கும் நிலையில், சபைக்கு வருகை தந்தை மேர்வின் சில்வா, அங்கிருந்த மகா சங்கத்தினரின் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு, முன்வரிசையில் அமர்ந்திருந்த சமல் ராஜபக்ஷ மற்றும் பிரமுகர்களுடன் கதைத்தவாறு டீ.ஏ. ராஜபக்ஷவின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். இவ்வாறு மலர் அஞ்சலி செலுத்தும் போது சபையில் இருந்து அவருக்கு எதிராக கூக்குரல் எழ ஆரம்பித்தது.
இதற்கு மறுதலையாக மேர்வின் சில்வாவும் கூக்குரல் இட்டவாறே வெளியேறிச் சென்றார். செல்லும் போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த மேர்வின் சில்வா கூறுகையில்,
“தனக்கு அரசியல் பிரவேசத்தைப் பெற்றுத் தந்தவர் என்ற வகையில் அவருக்கு மரியாதை செலுத்தும் முகமாகவே வருகை தந்தேன். வேட்பாளர் பட்டியலில் பெயர் போட்டுக் கொள்வதற்காக நான் வரவில்லை. மஹிந்த ராஜபக்ஷவுடன் நரிகள் இருபதனால்தான் அவர் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். இந்த நரிகளினாலேயே நான் தொடர்ந்தும் சிங்கமாக செயற்படுகின்றேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

