பத்திரிகைச் செய்திகளுக்கு பதிலடி கொடுத்த கி.மா. கல்வி அமைச்சர்




கிழக்கு மாகாணத்தின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 3400 மில்லியன் ரூபா திறைசேரிக்கு திரும்பிச் செல்கின்றது என்ற செய்தி இன்றைய தமிழ் நாளிதழ்கள் சிலவற்றிலும் இணையத்தளங்கள் சிலவற்றிலும் வெளியாகியிருந்ததைக் கண்ணுற்றேன்.

பட்டியிருப்பு வலயத்தின் திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியாலயத்தில் அமையவிருக்கும் புதிய கட்டிடத்துக்கான  அடிக்கல் நாட்டும் வைபவத்தில் மாகாண சபை உறுப்பினர் கௌரவ கோவிந்தன் கருணாகரம் அவர்கள் இவ்வாறு உரையாற்றினார் என்று அந்தச் செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியின் அடிப்படையில் சில விளக்கங்களை தர வேண்டியது எனது பொறுப்பாகும். இந்த வருடத்தில் மத்திய கல்வி அமைச்சு 'அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' என்ற திட்டத்தின் கீழ் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைளை மாகாணங்களின் மூலமாக மேற்கொண்டுள்ளது. 

இத்திட்டத்தின் கீழ், செயற்றிட்டம் A,B,C,D  என்றவாறு பாடசாலைகள் வகைப்படுத்தப்பட்டன. எமது மாகாணத்தில் செயற்றிட்டம்  Aயில் 62 பாடசாலைகளும் செயற்றிட்டம் Bயில் 99 பாடசாலைகளும் செயற்றிட்டம் Cயில் 76 பாடசாலைகளும் செயற்றிட்டம் Dயில் 443 பாடசாலைகளும் தெரிவு செய்யப்பட்டன. இதனை விட குடிநீர், கழிப்பறை, மின்சார வசதிகளை ஏற்படுத்துவதற்காக 570 பாடசாலைகளும் தெரிவு செய்யப்பட்டன.

இப்பாடசாலைகளில் செயற்றிட்ட வசதிக்கேற்ப ஆசிரியர் விடுதிகள், சிற்றுண்டிச்சாலைகள், கனிஷ்ட இடைநிலை ஆய்வுகூடங்கள், விளையாட்டுத்தொகுதி, அழகியற்; தொகுதி,  தொழில்நுட்பக் கட்டிடம், ஆரம்பப்பிரிவு கற்றல் வள நிலையங்கள,; வகுப்பறை கட்டிடங்கள், அதிபர் விடுதிகள், சிறு திருத்த வேலைகள் பாரிய திருத்த வேலைகள், குடிநீர், கழிப்பறை, மின்சாரம் வசதிகள் முதலான பல்வோறு நிர்மாணச் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டன. இவ்வாறு திட்டமிடப்பட்ட 2314 நிர்மாணச் செயற்பாடுகளுக்காக கல்வி அமைச்சால் இவ்வருடத்திற்காக 5458மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்ட்டது.

இந்தத்திட்டம் மத்திய கல்வி அமைச்சால் உருவாக்கப்பட்ட ஒரு விசேட திட்டமாகும், இந்த திட்டத்துக்கான பல்வேறு கலந்துரையாடல்கள் தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் நடாத்தப்பட்டு,  பின்னர் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றிற்கான அங்கீகாரம் பெறப்பட்டு இறுதியாக இத்திட்டம் இவ்வருட நடுப்பகுதியின் பின்னரே உண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

அரை வருடம் கடந்த நிலையில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 5458 மில்லியன் ரூபாவுக்கான கட்டுமானங்களை வருட முடிவுக்குள் முழுமையாக பூர்த்தி செய்வதில் எதிர் கொள்ள வேண்டிய பிரச்சனைகள் பற்றி கல்வி அமைச்சுக்கு எடுத்துக் கூறப்பட்டபோது இவ் வருடத்திற்கான ஒதுக்கீடு, அடுத்த வருடத்திற்கும் நிர்மாண வேலைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படலாம் என எமக்கு கூறப்பட்டது. ஆகவே இவ்வருடத்திற்கான ஒதுக்கீட்டில் ஒரு ரூபாவேனும் திரும்ப மாட்டாது என்பதை கிழக்கு கல்விச் சமூகத்திற்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.


பாடசாலைகளின் அபிவிருத்திற்காக இத்தனை அதிகமான நிதி ஒதுக்கீடு இதுவரை காலத்திலும் கிழக்கு கல்வி அமைச்சுக்கு கிடைத்திருக்கவில்லை. ஏனைய மாகாணங்களுக்கும் அவ்வாறேதான்  (மேல் மாகாணம் தனக்கு கிடைத்த இந்த நிதியில் ஒரு பகுதியை கையாளுவதற்கு சாத்தியமில்லை எனக்கூறி திருப்பிவிட்டுள்ளது.) ஆயினும் கிடைத்துள்ள இந்த நிதி ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கில் மாகாணத்தின் பாடசாலை வேலைகள் பிரிவு துரிதமாகச் செயலாற்றுகின்றது. இச் செயற்றிட்ட வேலைகளுக்காக மேலதிக பொறியியலாளர்கள் சிலரும் வேலை மேற்பார்வையாளர்களும் தற்காலிக அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

திட்டமிடப்பட்ட 2314 நிர்மாணச் செயற்பாடுகளில் 1311 செயற்பாடுகள் இவ் வருடத்தின் இறுதிக்குள் ஆரம்பிக்கப்படுவதற்கும் அவற்றில் கனிசமான நிர்மானச் செயற்பாடுகளை முடிப்பதற்குமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2025 மில்லியன் ரூபாவுக்கான நிர்மாண வேலைகள் முடிவுறுத்தப்படும். மிகுதி வேலைகள் அடுத்த வருடம் தொடர்ந்து நடைபெறும்.


இந்த திட்டத்துக்கான 5458 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டை விட பாடசாலையின் நிர்மாண வேலைகளுக்காக வழமையாக ஒதுக்கப்பட்டுகின்ற மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை (PSDG) இவ்வருடம் 1010 மில்லியனாக  கடந்த வருடங்களை விட அதிகமாகக் கிடைத்துள்ளது. அத்துடன் உலக வங்கி நிதியுதவியாக பாடசாலை கட்டிட நிர்மாணங்களுக்காக இவ்வருடம் 485மில்லியன் கிடைத்துள்ளது. இந்த நிதிகளுக்கான நிர்மாண வேலைகளும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆகவே மாகாணக் கல்வி அமைச்சும், மாகாண கல்வித் திணைக்களமும் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக கிடைத்துள்ள நிதி ஒதுக்க்Pடுகளை முழுமையாக பயன்படுத்துவதற்காக சாத்தியமான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றேன். மாகாணத்திற்கு கிடைத்துள்ள நிதி ஒதுக்கீடுகளில் ஒரு ரூபாவேனும் திரும்ப மாட்டாது என்பதை விமர்சனங்களை முன்வைப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


சி.தண்டாயுதபாணி,
கல்வி அமைச்சர்,
கிழக்கு மாகாணம்,
திருக்கோணமலை.