கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான பேராசிரியர் சி.ரவிந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டு 10 வருடங்களாகியும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இதுவரையில் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது குறித்து கிழக்கு பல்கலைக்கழக சமூகத்தினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்து 10வது ஆண்டை நினைவு கூறும் வகையில் இன்று வியாழக்கிழமை கிழக்கு பல்கலைக்கழக சமூகம் சம்பவம் தொடர்பான உண்மை நிலையை தற்போதைய அரசாங்கம் கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
காணாமல் போன துணை வேந்தர்
கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி ஏற்று சில மாதங்கள் பின்னர் அதாவது 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி கொழும்பில் வைத்து மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார்.
இந்த சம்பவத்தின் 10 ஆம் ஆண்டை நினைவு கூறும் வகையில் இன்று வியாழக்கிழமை கிழக்கு பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக அமைதிப் போராட்டமொன்றும் நடைபெற்றது.
''பேராசிரியர் சி.ரவிந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் " போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கல்வி மற்றும் கல்வி சார ஊழியர்கள் இந்த அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

