மஸ்கெலியா :பணிப்பெண் உயிரிழப்பு



(க.கிஷாந்தன்)

இலங்கையிலிருந்து மத்தியகிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக தொழில் தேடி செல்லும் மலையக பெண்கள் பலரை அந்நாடுகளில் உள்ள தடை முகாம்களில் வைக்கப்பட்டு சித்தரவதைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் இருந்து பணிப்பெண்களாக சென்றுள்ள 80ற்கும் மேற்பட்ட பெண்கள் தடை முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் அட்டன் – மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்டத்தில் இருந்து 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பழனியாண்டி கற்பகவள்ளி என்ற மூன்று பிள்ளைகளின் தாய் பணிப்பெண்ணாக சவூதி அரேபியா நாட்டின் றியாத் பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

இவரை கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்று தொழிலுக்காக அனுப்பி வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

ஆனால் இந்த பெண் கடந்த மாதம் 31ம் திகதி சவூதி அரேபியா நாட்டின் றியாத் பிரதேசத்தின் ஒலேய்யா பபா என்ற முகாமில் இருந்த வேளையில் உயிரிழந்துள்ளார்.

இவரின் உயிரிழப்பு தொடர்பாக சமூக வலைத்தளங்கள் அண்மையில் செய்திகளை வெளியிட்டிருந்தது.

இதனடிப்படையில் உயிரிழந்தவர் தன்னுடைய சகோதரி என்பதை வலையத்தளங்கள் ஊடாக பார்வையிட்ட உயிரிழந்த கற்பகவள்ளி என்ற பெண்ணின் சகோதரர் பழணியாண்டி பரமசிவம் அடையாளம் கண்டுள்ளார்.

குறித்த பெண் திருமணம் முடித்தவர். இவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். இவரின் கணவர் நீண்ட காலமாக இவருடன் இருக்கவில்லை என்பதை உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த 8 நாட்களுக்கு மேலாகியும் உயிரிழந்த பெண் தொடர்பில் அவர்களின் குடும்பத்தாருக்கு எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை என்பதினை குடும்பத்தினர் 07.11.2016 அன்று ஊடகவியலாளர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ள அதேவேளை இவ்விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இவரின் உடலத்தை இலங்கைக்கு கொண்டு வர நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகியோர் இணைந்து சவூதிக்கான இலங்கை தூதரகத்தின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொண்டு உடலத்தை இலங்கைக்கு கொண்டு வந்து உறவினர்களிடம் கையளிக்கபட உறுதியான தீர்வு ஒன்றினை பெற்றுத்தரும் படி உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை குறித்த பெண்ணை இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக அனுப்பி வைத்த வெளிநாட்டு முகவர் நிலையம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுத்துள்ளதாக தெரியவில்லை. குறித்த பெண் இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு தொழிலுக்கு சென்ற வேளையில் தமது உறவினர்களுக்கு இரண்டு முறை மாத்திரமே சம்பள பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அதேவேளை குடும்பத்தினர் இப்பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். அதன்போது குறித்த உயிரிழந்த இப்பெண் தான் பணிப்புரிந்த வீட்டில் தன்னை துன்புறுத்துவதாகவும், அடிமைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இப்பெண் கடந்த 31ம் திகதி ஒலேய்யா பபா முகாமில் தடுத்து வைத்திருந்த போது உயிரிழந்துள்ளமை குறிப்பிடதக்கது.