பொது மக்களை பிரதான வீதியில் ஒன்று திரட்டி சமாதானத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் கலகத்தை உண்டு பண்ணுவதற்கு உடந்தையாக இருந்தார்கள் எனக் கூறி, இருவருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் அழைப்பானை விடுத்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் உபதலைவர் எஸ்.பூபாலராஜா உட்பட இருவருக்கு எதிராகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் மட்டக்களப்பு நகரில், பொதுபலசேனாவின் வருகையை தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மங்களாராம விகாரதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் ஆர்ப்பாட்ட நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவினை மீறி தேரரின் ஆர்ப்பாட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமையால், பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொலிஸார் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாதனை கண்டித்தும் பொதுமக்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மட்டக்களப்பில் குழப்பநிலை ஏற்பட்டது.
இதற்கமைய பொதுமக்களை பிரதான வீதியில் ஒன்று திரட்டி சமாதானத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் முறையில் கலகத்தை உண்டு பண்ணுவதற்கு உடந்தையாக இருந்தார்கள் என இருவர் மீது மட்டக்களப்பு பொலிஸார் வழக்கு தொடுத்துள்ளனர்.
எதிர்வரும் 14ம் திகதி மட்டக்களப்பு நீதவான் நிதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளன

