முதல்வர் உடல்நிலை பற்றிய வதந்தியால், கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அதிமுக அலுவலகம் தவிர, ஒட்டுமொத்த தமிழகமும் வெறிச்சோடி முடங்கிக் கிடக்கின்றது. குறிப்பாக சென்னையில் கடும் போக்குவரத்து நெருக்கடியோடு இயங்கும் பிரதான சாலைகள் அனைத்தும் மாலை 6 மணி முதல் வெறிச்சோடி கிடக்கின்றன.
நேற்று (4.12.2016) மாலை முதலே முதல்வர் உடல்நிலை பற்றிய வதந்திகள் தீவிரமாகப் பரவத் தொடங்கின. வாட்ஸ் அப் மூலம் பல்வேறு செய்திகள் பரவியதால் இன்று அதிகாலை முதல் பெரும் பரபரப்பு நிலவியது. ஆயினும் பள்ளி, கல்லூரிகள் இயங்கின. மதியம் முதல் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பல பள்ளிகள், பிள்ளைகளை வந்து அழைத்துச் செல்லுமாறு பெற்றோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பின. பல அலுவலகங்களில் மாலை 3 மணியோடு ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். குறைந்த அளவே ஓடிய பேருந்துகளும் படிப்படியாகக் குறைக்கப்பட்டன.
இச்சூழலில், அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளிவராத நிலையில், மாலை ஐந்தரை மணி அளவில் சில தொலைக்காட்சி ஊடகங்கள் முதல்வர் பற்றிய செய்திகளை ஒளிபரப்பின. இதையடுத்து, பல இடங்களில் வன்முறை பற்றிக் கொண்டது. அப்போலோ மருத்துவமனையை சிலர் தாக்கத் தொடங்கினார்கள். சில நிமிடங்களிலேயே அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட செய்தி தவறென்றும் முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திக்குறிப்பு வெளியிட்டது.
ஆயினும், மாலை முதலே சென்னையின் பிரதான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. ஒருசில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இரவு 8 மணிக்கெல்லாம் சென்னை முற்றிலும் அடங்கி விட்டது. உச்சக்கட்ட பரபரப்பில் இருக்கும் மவுண்ட்ரோ டு வெறிச்சோடிக் காணப்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு, அண்ணா நகர் பகுதிகளில் ஓரிரு வாகனங்கள் மட்டுமே இயங்கின. கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை மிகக் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளும் ஒன்றிரண்டு மட்டுமே இயங்கின. பெரும்பாகடைகள் மூடப்பட்டிருப்பதால் எல்லாப் பகுதிகளுமே இருண்டு கிடக்கின்றன. பெரும்பாலும் ஹோட்டல்களையே நம்பியிருக்கும் பேச்சிலர்கள் உணவு தேடி அலைவதைப் பார்க்கமுடிகிறது. மால்கள், பிரமாண்ட வணிக நிறுவனங்கள் எல்லாம் அடைக்கப்பட்டு அமைதியில் ஆழ்ந்திருக்கின்றன. ஆங்காங்கே காவல் வாகனங்கள் நிற்கின்றன. கூட்டமாக வருபவர்களை நிறுத்தி விசாரிக்கிறார்கள்.
சிக்னல்களில் போக்குவரத்துக் காவலர்கள் தவிர யாருமில்லை. நாளை பள்ளி திறக்கப்படுமா, பேருந்துகள் ஓடுமா, அலுவலகம் செல்ல முடியுமா என ஏராளமான கேள்விகள் மக்களை சூழ்ந்திருக்கின்றன. பரபரப்பும், நம்பிக்கையுமாக நாளைய விடியலை நோக்கி இந்த இரவு நகர்ந்து கொண்டிருக்கிறது.லான பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. திறந்திருக்கும் ஒரு சில பெட்ரோல் பங்குகளில் டூவீலர்கள் நிறைந்திருக்கின்றன. ஏடிஎம்களில் மட்டும் வரிசை நிற்கிறது.

