இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஒரு செயற்கைக்கோளைச் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தியபோது, பெங்களுருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்(இஸ்ரோ), தங்களது தலையில் பூச்சூடி, அழகான சேலை அணிந்த பெண்கள் , தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புகைப்படம் மிகப் பிரபலமானது.
அந்த புகைப்படம், இந்தியாவில், விண்வெளி ஆராய்ச்சித் துறையில், ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்ற வழமையான ஒரு கருத்துணர்வுக்கு சவால் விடுவதாக இருந்தது.
ஆனால், பின்னர், இஸ்ரோ(Isro) அந்தப் புகைப்படத்தில் காணப்பட்ட பெண்கள் இஸ்ரோ நிர்வாக பிரிவில் பணிபுரியும் பெண்கள் என்று தெரிவித்தது. ஆனால் செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் பெண் விஞ்ஞானிகள் பலரும் பணிபுரிந்தனர் என்றும் அவர்கள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தனர் என்றும் தெளிவுபடுத்தியது.
பிபிசியின் செய்தியாளர் கீதா பாண்டே சமீபத்தில், பெங்களூருவிற்கு சென்று, இந்திய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய பெண் விஞ்ஞானிகளைச் சந்தித்தார்.
மங்கள்யானை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய பெருமை
வட இந்தியாவின் லக்னோ நகரத்தில் வளர்ந்த கரிதால் சிறுவயதில் ''வானத்தைப் பார்த்து சந்திரனின் அளவு பற்றி யோசிப்பேன், ஏன் அது வளர்கிறது மற்றும் தேய்கிறது என்று யோசிப்பேன். அதன் இருண்ட இடங்களின் பின்னால் என்ன இருக்கும் என்று நான் அறிய விரும்பினேன்'' என்கிறார்.
அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்த மாணவியான கரிதால், இயல்பியல் மற்றும் கணிதத்தில் ஆர்வமுடன் இருந்தார். தினமும் நாசா (NASA) மற்றும் இஸ்ரோ(ISRO)வின் திட்டங்கள் பற்றிய செய்திகள் வந்துள்ளனவா என்று தேடிப் படிப்பதுடன், வெளியான செய்திகளைக் கத்தரித்து, சேகரிப்பது, விண்வெளி ஆராய்ச்சி குறித்த எல்லா சின்ன விவரங்களையும் விடாமல் படிப்பது என மிக ஆர்வத்தோடு இருந்தார்.
பட்ட மேற்படிப்பு முடிந்தவுடன், ''இஸ்ரோவில் ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பித்தேன். இப்படித்தான் நான் விண்வெளி விஞ்ஞானி ஆனேன்,'' என்றார் கரிதால்.
தற்போது 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. கரிதால் இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அதில் , செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்பிய, பிரசித்தி பெற்ற மங்கள்யான் திட்டமும் அடங்கும். இந்த திட்டம் கரிதால் மற்றும் அவரது சக பணியாளர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது.
இந்தியா பெண் விஞ்ஞானிகளிடம் என்ன எதிர்பார்க்கிறது?
மங்கள்யான் திட்டம் ஏப்ரல் 2012ல் தொடங்கியது. அறிவிப்பிற்கு பிறகு செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்ப வெறும் 18 மாதங்கள் தான் விஞ்ஞானிகளுக்கு இருந்தது.
``இந்தத் திட்டத்தை செயல்படுத்த மிகக் குறைந்த காலம் தான் இருந்தது. அது பெரிய சவாலாக இருந்தது. மற்ற கிரகங்களுக்கு கலன்களை அனுப்பிய அனுபவம் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு இருந்த குறைந்த காலத்தில் நாங்கள் நிறைய வேலைகளை செய்ய வேண்டியிருந்தது`` என்றார் அவர்.
இந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்து பெண் விஞ்ஞானிகளான நாங்கள் இருந்த போதும், இந்த வெற்றிக்கு அனைவரின் கூட்டு முயற்சி தான் காரணம் என்கிறார் கரிதால்.
நாங்கள் பொறியாளர்கள் மற்றும் அனைத்து குழு உறுப்பினர்களும் கலந்து பேசுவோம். கால நேரம் இல்லாமல் இந்த திட்டம் குறித்து ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்போம். பெரும்பாலான வார விடுமுறை நாட்களிலும் நாங்கள் வேலைசெய்வோம், '' என்கிறார் கரிதால்.
''குடும்பத்தையும், வேலையையும் கவனிப்பது எளிதான ஒன்று இல்லை. ஆனால் எனக்கு என் குடும்பம், எனது கணவர் மற்றும் என் உடன் பிறந்தவர்கள் ஆகியோரின் ஆதரவு எனக்கு கிடைத்தது,'' என்கிறார் இரண்டு குழந்தைகளுக்கு தாயான கரிதால்.
செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்த பெண்கள்
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட போது, எனது மகனுக்கு 11வயது, எனது மகளுக்கு ஐந்து வயது. பல வேலைகளை ஒரே நேரத்தில் நாங்கள் செய்ய வேண்டியிருந்தது.
எங்களது நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டியிருந்தது. எனது வேலையில் களைப்பாகி வீடு திரும்பிய போதெல்லாம் எனது வீட்டில் குழந்தைகளுடன், அவர்களுக்கான நேரத்தை தந்து, மகிழ்ச்சியோடு இருந்தேன். அந்த நேரத்தில் நான் நிம்மதியாக இருப்பதாக உணர்ந்தேன். அதை நான் விரும்பினேன்,'' என்றர் கரிதால்.
'' Men are from Mars, Women are from Venus '' என்ற புத்தகத்தின் தலைப்பை வைத்து, ஆண்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்தும், பெண்கள் வெள்ளி கிரகத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் பொதுவாக சொல்லப்படுவது உண்டு.
ஆனால் இந்த செவ்வாய்க் கிரக திட்டத்தின் வெற்றியை அடுத்து, இந்திய பெண் விஞ்ஞானிகளை ``செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்த பெண்கள்`` என்று பலர் வர்ணித்தனர். ஆனால், நான் பூமியைச் சேர்ந்த பெண். மற்றும் ஒரு அற்புதமான வாய்ப்பை பெற்றுள்ள ஒரு இந்திய பெண்மணி,'' என்கிறார் கரிதால்.
''செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்பிய திட்டம் பெரிய சாதனை தான். ஆனால் நாங்கள் இன்னும் பலவற்றை செய்ய வேண்டிய தேவை உள்ளது. இந்த நாடு எங்களிடம் நிறைய திட்டங்களை எதிர்பார்க்கிறது.
அதன் மூலம் இந்த நாட்டின் கடைகோடியில் உள்ள நபருக்கு பலன் அளிக்கும் என்பதால் எங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த விஷயத்தில் பெண் விஞ்ஞானிகளை விட வேறு யார் இதைச் செய்ய முடியும்?,'' என்ற கேள்வியை முன் வைக்கிறார் கரிதால்.
உலகின் கவனத்திற்கு வந்த மங்கள்யான்
தொலைக்காட்சியில் `ஸ்டார் ட்ரெக்` (Star Trek ) என்ற நிகழ்ச்சியைப் பார்த்தது தான் நந்தினி ஹரிநாத்தின் முதல் அறிவியல் அனுபவம்.
''எனது அம்மா கணித ஆசிரியர். எனது அப்பா ஒரு பொறியாளர். அவருக்கு இயற்பியலில் ஆர்வம் அதிகம். எங்களது குடும்பத்தில் நாங்கள் அனைவரும் `ஸ்டார் ட்ரெக்`நிகழ்ச்சி மற்றும் அறிவியல் கவிதைகள் தொடர்பான எல்லா நிகழ்ச்சிகளையும் விரும்பிப் பார்ப்போம்.'' அதே சமயம், விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்று தான் யோசித்தது இல்லை என்கிறார் ஹரிநாத். ''அது இயல்பாக நடந்தது,'' என்கிறார் நந்தினி ஹரிநாத்.
''இது தான் நாம் முதலில் முறையாக விண்ணப்பித்த வேலை. எனக்கு வேலை கிடைத்தது. தற்போது 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அதற்கு பிறகு அது குறித்து நான் மறு யோசனை எதையும் செய்யவில்லை,'' என்றார்.
செவ்வாய்க் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்பிய திட்டத்தில் வேலை செய்தது எனது வாழ்க்கையில் ஒரு பெரிய சாதனை காலம். இந்தத் திட்டம் இஸ்ரோவிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கு முக்கியமான திட்டம். இந்தத் திட்டம் நம்மை ஒரு உயர்வான தளத்தில் கொண்டுவைத்தது. பல வெளி நாடுகளும் நம்மோடு இணைய எதிர்பார்ப்புடன் உள்ளனர். எங்களுக்கு கிடைத்த முக்கியத்துவம் மற்றும் கவனம் நியாயமான ஒன்று தான்,'' என்றார்.
''இஸ்ரோவிற்குள் என்ன நடக்கிறது என்பதை பார்க்க பொது மக்களை முதல் முறையாக இஸ்ரோ அனுமதித்தது. நாங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை எழுதினோம். எங்களுக்கு ஒரு பேஸ்புக் பக்கத்தை தொடங்கினோம். இதை உலகின் கவனத்திற்கு வந்தது,'' என்றார்.
''நான் செய்த சாதனையால் பெருமைப்படுகிறோம். சில சமயம், நான் மிக உயர்வாக எண்ணுகிறேன். ஆனால் சில சமயம் இந்தப் புகழ்ச்சியால் சற்று சங்கோஜமும் அடைகிறேன்.'' என்கிறார் . '
ஆனால் தற்போது மற்றவர் எங்களைப் பார்க்கும் விதம் மிகவும் மாறியுள்ளது. பொது மக்கள் எங்களை விஞ்ஞானிகள் என்பதற்காக எங்களுக்கு ஒரு அங்கீகாரம் தருகிறார்கள். நான் அதை முழுமையாக அனுபவிக்கிறேன்,'' என்கிறார் நந்தினி ஹரிநாத்.
மங்கள்யான் திட்டத்தில் வேலை செய்ததால் மிகப் பெருமைப்படுகிறேன். புதிய ரூ.2,000 நோட்டில் மங்கள்யானின் படத்தைப் பார்த்ததும் உண்மையில் சிலிர்ப்பாக இருந்தது.
ஆனால் நாங்கள் மங்கள்யான் திட்டத்தில் வேலை செய்தது எளிதான ஒன்று அல்ல. அந்த திட்ட்த்தின் போது , எங்கள் வேலை நாட்கள் நீண்டவையாக இருந்தன,'' என்றார்.
தொடக்கத்தில் விஞ்ஞானிகள் ஒரு நாளில் 10 மணி நேரம் வேலை செய்தனர். ஆனால் மங்கள்யான் செலுத்தப்படும் நாள் நெருங்கியதும், வேலை நேரம் 12 முதல் 14 மணி நேரம் ஆனது,'' என்கிறார்.
''மங்கள்யான் விண்ணில் செலுத்தப்படும் வேளையில், நாங்கள் யாரும் வீட்டிற்குச் செல்லவில்லை. காலையில் அலுவலகத்திற்கு வருவோம். அந்த முழு நாளையும் இரவையும் இங்கு கழிப்போம்.அடுத்த நாள் மதியம், உண்பதற்கும், சில மணி நேரம் உறங்குவதற்கும் வீட்டிற்குச் செல்வோம். இது போன்ற காலக்கெடு கொண்ட முக்கியமான திட்டத்திற்கு வேலை செய்யும் போது இவ்வாறு தான் வேலை செய்ய வேண்டியிருக்கும்,'' என்கிறார்.
``நாங்கள் பல நாட்கள் தூக்கமில்லாத இரவுகளை கழித்தோம். இந்தத் திட்டத்தில் முன்னேறும் வேளையில், மங்கள்யானின் வடிவமைப்பு மற்றும் இந்தத் திட்டம் குறித்த பல பிரச்சனைகளை எதிர்கொண்டோம். ஆனால் விரைவில் அதற்கான தீர்வுகளை புதுமையான வழிகள் மூலம் கண்டோம்,'' என்றார்.
இதற்கு மத்தியில், ஹரிநந்தின் மகளின் பள்ளி பரீட்சை முடிவடைந்து விடுப்பு தொடங்கியது. அதை அவர் சிரமமாக உணர்ந்தார். '
'அந்த சில மாதங்கள் மட்டும் நாங்கள் வீட்டில் இருந்து வேலை செய்கிறோம் என்று கோரிக்கை வைத்தோம். அந்தச் சமயம் வேலை என்பது ஒரு போட்டி போல இருந்தது. எனது மகள் பரிட்சைக்கு படிக்க நான்கு மணிக்கு எழும் போது நானும் அவளோடு எழுந்துவிடுவேன். தற்போது அந்த நேரத்தை மகிழ்ச்சியோடு எண்ணிப் பார்க்கிறோம். எனது மகள் மிகச் சிறப்பான வகையில் மதிப்பெண்களைப் பெற்றாள். கணிதத்தில் 100க்கு 100 எடுத்தாள். தற்போது என் மகள் மருத்துவம் படிக்கிறாள். அன்று எடுத்த முயற்சியின் உண்மையான பலன் இது தான் என்று நான் எண்ணுகிறேன்,'' என்றார்.
''செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்பியது பெரிய சாதனை தான். ஆனால் தற்போது அது முடிந்து விட்டது. நாங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கின்றோம். இன்னும் என்ன எங்களால் செய்ய வேண்டியுள்ளது என்று யோசிக்கின்றோம். நாம் ஆராய்வதற்காக இந்த முழு அண்டமும் காத்துக்கொண்டிருக்கிறது. பல கோள்கள் உள்ளன. அதனால் நாம் அதை ஆராய செல்ல வேண்டிய நேரம் இது,'' என்கிறார்.
நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் மங்கள்யான் வரை
பாலினம் ஒரு பொருட்டல்ல
1982ல் இஸ்ரோவில் அனுராதா சேர்ந்தபோது, வெகு சில பெண்கள்தான் இஸ்ரோவில் இருந்தனர். அதோடு மிகவும் குறைவான அளவில் தான் பொறியியல் துறையில் இருந்தனர். ''என்னோடு பொறியியல் பயின்ற ஐந்து, ஆறு பெண் பெண்கள் பொறியியலாளர்கள் இஸ்ரோவில் சேர்ந்தனர். நாங்கள் தனித்து காணப்பட்டோம். தற்போது இஸ்ரோவில் மொத்தம் உள்ள 16,000 ஊழியர்களில், 20 முதல் 25 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் உள்ளனர். தற்போது நாங்கள் தனித்து தெரிவதில்லை,'' என்கிறார் புன்னகையுடன்.

