அம்பாறை மாவட்டத்தில் தொடரும் அடைமழை காரணமாக 40 குடும்பங்கள் இடம்பெயந்துள்ளதாக திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயராயன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 40குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300ற்கு மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக இன்று அவர் குறிப்பிட்டார்.
திருக்கோவில் 01ம் பிரிவு, விநாயகபுரம் மற்றும் காஞ்சினங்குடா ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த மக்களே இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், பிரதேச செயலாளர் தெரிவித்தார். இவர்களுக்கான உலர் உணவுகள்வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளதோடு, உள் வீதிகளில் நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து செய்ய முடியாத நிலைதோன்றியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
24 மணித்தியாலத்துக்குள் சாகாமம் பிரதேசத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 180.03 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பொத்துவில் வானிலை அவதானநிலைய பொறுப்பதிகாரி எம்.ஐ.ஏ. நயிம் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் 100.02 மில்லிமீற்றர், அம்பாறை பிரதேசத்தில் 76.02 மில்லிமீற்றர், எக்கலஓயா 97.02மில்லிமீற்றர், பதியத்தலாவை பிரதேசத்தில் 119.08மில்லிமீற்றர், ரூபஸ்குளத்தில் 134.05 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எம்.ஐ.ஏ. நயிம் மேலும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 31ம் திகதி வரை மழை காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமெனவும் பொறுப்பதிகாரி எம்.ஐ.ஏ. நயிம் மேலும் கூறினார்.

