சிறந்த 25 துறைமுகங்களுக்குள் கொழும்பு துறைமுகம்



கொழும்புத் துறைமுகமானது, உலகிலுள்ள சிறந்த 25 துறைமுகங்களுக்குள் தரமுயர்ந்துள்ளது. 2017ஆம் ஆண்டு சர்வதேச எல்பாலைனர் (Alphaliner) 2 தரப்படுத்தலுக்கமைவாகவே துறைமுகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இத்தரப்படுத்தலுக்கு அமைய 2016ஆம் ஆண்டு உலகிலுள்ள சிறந்த துறைமுகங்களுள் 23ஆம் இடத்தைப் பிடித்திருந்தது. 2015ஆம் ஆண்டு, கொழும்புத் துறைமுகமானது 26ஆம் இடத்திலேயே தரப்படுத்தப்பட்டிருந்தது. கொழும்புத் துறைமுகத்தினுள் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்ககூடிய சிறந்த சூழலை உருவாக்கியமையே இவ்வெற்றியின் இரகசியமென, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். 

கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்களை, இன்று (23) சந்தித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், "கொழும்புத் துறைமுக வளாகத்தினுள் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்ககூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம். அதனடிப்படையில் தங்களுடைய கௌரவத்தினை பாதுகாத்தவண்ணம், ஒட்டுமொத்த கொழும்புத் துறைமுகத்தின் அபிவிருத்தியின் பொருட்டு அனைத்து தரப்பினரையும் எம்மால் ஒன்றிணைக்க முடிந்துள்ளது. இதற்கு மேலதிகமாக கொழும்புத் துறைமுகத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது" எனவும் அமைச்சர் தெரிவிதார்.