ரணில் சிறியன் விக்கிரமசிங்க (Ranil Shriyan Wickremesinghe, சிங்களம்: රනිල් වික්රමසිංහ, பிறப்பு: 24 மார்ச் 1949) இலங்கை அரசியல்வாதியும், பிரதமரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2015 சனவரி 9 முதல் பிரதமராகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 1994 முதலும், 1977 முதல் கொழும்பு மாவட்டநாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவர் ஐக்கிய தேசிய முன்னணி, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய அரசியல் கூட்டணிகளின் தலைவராகவும் உள்ளார்.[1]
விக்கிரமசிங்க 1993 முதல் 1994 வரையிலும், பின்னர் 2001 முதல் 2004 வரையிலும் இலங்கையின் பிரதமராகப் பதவியில் இருந்துள்ளார். 1994 இல் காமினி திசாநாயக்கா படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2]
சனவரி, 2015ஆம் ஆண்டில் இலங்கை சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன தனது 100-நாள் நல்லாட்சி வேலைத் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கையின் பிரதமராக நியமித்தார்.[3] 2015 ஆகத்தில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஆனாலும், அது அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறியது. ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் செய்துகொண்ட இரண்டாண்டு உடன்படிக்கையை அடுத்து ரணில் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.[4][5]
இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வவுனியாவில் கைச்சார்த்திடுவதில் ரணில் முக்கிய பங்காற்றினார்.

