கீத் நொயார் மீதான தாக்குதல் சம்பவம் : மற்றுமொரு இராணுவ அதிகாரி கைது



ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சந்தேகநபரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று கைது செய்திருந்தனர்.
இராணுவப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சபையின் உறுப்பினரான இந்த சந்தேகநபர் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளியான தகவல்களுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான இராணுவ கோப்ரல் நிலை அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
“த நேஷன்” பத்திரிகையின் பிரதி ஆசிரியராக கடமையாற்றிய கீத் நொயார் கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர் உட்பட 5 பேரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் இருக்கும் கீத் நொயார் இதுவரை இலங்கை வராத காரணத்தினால், சந்தேகநபர்களை அடையாளம் காண நடத்தப்படவிருந்த அடையாள அணி வகுப்புகள் ஒத்திவைக்கப்பட்டன.