புத்தாண்டையொட்டி, நாளை (10) தொடக்கம் 20ஆம் திகதி வரை, நாட்டிலுள்ள அனைத்து சதொச நிலையங்களிலும் சுமார் 1,500 ரூபாய் பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதியொன்று, 975 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நுகர்வோரின் நன்மை கருதி புத்தாண்டு சலுகையாக இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் தென்னக்கோன் கூறியதாவது, இந்தப் பொதியில் 1 கிலோகிராம் பருப்பு (160 ரூபாய்), 500 கிராம் உருளைக்கிழங்கு (70 ரூபாய்), 1 கிலோகிராம் பெரிய வெங்காயம் (100 ரூபாய்), 2 கிலோகிராம் வெள்ளைப் பச்சையரிசி (150 ரூபாய்), 500 கிராம் நெத்தலி (200 ரூபாய்), 1 கிலோகிராம் சீனி (105 ரூபாய்), 425 கிராம் டின் மீன் (125 ரூபாய்), 200 கிராம் துண்டு மிளகாய் (175 ரூபாய்), 500 கிராம் கடலை (100 ரூபாய்), 400 கிராம் பால் மா (சதொச) (310 ரூபாய்) என 1,495 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய பொருட்களைக்கொண்ட பொதி, 975 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த வகையில், இலங்கையிலுள்ள மக்களின் பாவனைக்கென, 10 இலட்சம் பொதிகள் இவ்வாறான சகாய விலைக்கு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். -

