பனாமா கப்பலில் பாரிய தீ; களத்தில் இலங்கைக் கடற்படையினா்



சிங்கப்பூரிலிருந்து எகிப்து நோக்கிப் பயணித்த, டேனியலா எனும் குறித்த கப்பல், கொழும்பின் தென்பகுதி கடற்பரப்பிற்கு அருகில் தீப்பிடித்துள்ள நிலையில், குறித்த கப்பலின் தீயை அணைக்கும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
தீயணைக்கும் பணியில் அதிவேக படகுகள் உள்ளிட்ட 09 படகுகள் ஈடுபட்டுள்ளதோடு, துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான 4 படகுகளும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பிலிருந்து சுமார் 120 கடல் மைல் தூரத்தில் தீப்பிடித்த குறித்த கப்பலின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தற்போது, இலங்கைக்கு 9 கடல் மைல் தூரத்திற்கு கொண்டு வரப்பட்டு நங்கூரமிடப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சேத விபரம் குறித்தான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.