ஏழாவது முறையாக இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் விருது பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவிஞர் வைரமுத்து, தற்கொலை எண்ணத்தைத் தடுக்கும் நோக்கத்தோடு எழுதப்பட்ட தனது பாடலுக்கு விருது கிடைத்திருப்பது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.
"அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் திரைப்பாடலைப் பொறுத்தவரையில் தமிழ்தான் முன்னிற்கிறது என்பதில் என் சமகாலச் சமூகம் மகிழ்ச்சி அடைகிறது என்றும், பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல; நான் ஒரு கருவி மட்டுமே", என்று ஓர் அறிக்கையில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தர்மதுரை படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு இந்த விருது கிடைத்துள்ளதால், இத்திரைப்படத்தின் இயக்குநர் சீனுராமசாமி, இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் சுகுமார், நடித்த விஜய்சேதுபதி - தமன்னா, தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், குரல் கொடுத்த பாடகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பாடல் தற்கொலைக்கு முயன்றவனைத் தாங்கிப் பிடிக்கும் பாடலாகும் என்று அவர் கூறியுளள்ளார்.
தற்கொலை என்பது தேசத்தின் நோயாகப் பெருகிவருகிறது. காதல் தோல்வி - மன அழுத்தம்- அச்சம்- வறுமை என்ற காரணங்களே மனிதர்களைத் தற்கொலைக்கு தள்ளுகின்றன.
எந்த ஒரு தோல்வியிலும் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. தோல்வி என்பது அடுத்த வாசலுக்கான கதவு என்று உணர்த்த வேண்டும். அதைத்தான் இந்தப்பாடலை பாடும் நாயகி நாயகனுக்கு நினைவுறுத்துவதாக பாடலின் வரிகளோடு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
கவிஞர் வைரமுத்து தேசிய விருது பெற்ற படங்கள்:
| ஆண்டு | படம் |
|---|---|
| 1986 | முதல் மரியாதை |
| 1993 | ரோஜா |
| 1995 | கருத்தம்மா மற்றும் பவித்ரா |
| 2000 | சங்கமம் |
| 2003 | கன்னத்தில் முத்தமிட்டால் |
| 2011 | தென்மேற்குப் பருவக்காற்று |
| 2017 | தர்மதுரை |

