திருக்கோவில் ஆலய நகைக் கொள்ளையர்கள் சிக்கினர்



அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஆலயங்களின் கதவுகளை உடைத்து நீண்ட நாட்களாக நகைகளைக் கொள்ளையடித்து வந்த பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர், கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். 

கடந்த திங்கட்கிழமை இரவு, விநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோயிலின் மூலஸ்தானக் கதவு உடைக்கப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இச் சம்பவம் தொடர்பாக ஆலயத் தலைவர், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

இந்நிலையில், பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தொலைபேசி தகவலையடுத்து கோமாரி கிராமத்தை சேர்ந்த விநாயகபுரம், கண்ணகிபுரம் கிராமங்களில் வசிக்கும் பிரதான சந்தேகநபர் பொலிஸாரினால் நேற்று வெள்ளிக்கிழமை விநாயகபுரத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அவரிடம் மேற்கொண்ட விசாரனையையடுத்து இரண்டாவது சந்தேகநபர் அட்டப்பளத்தில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்டு விசாரணை செய்ததில், விநாயகபுரம் காளி கோயிலில் திருடப்பட்ட நகைகள், களுவாஞ்சிகுடி மகிலுர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணிடம் கொடுத்து களுதாவளைப் பகுதியில் உள்ள நகைக் கடையில் அடகு வைக்கப்பட்டு, ஒரு இலட்சத்தி மூவாயிரம் ரூபாய் பணம் பெறப்பட்டமை தெரியவந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து, நகை அடகு வைக்க உதவிய பெண்ணை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் வயல் காட்டில் வைத்துக் கைதுசெய்துள்ளதுடன், இவரிடம் இருந்து 25,000 ரூபா பணமும் பெறப்பட்டுள்ளது. 

இவரின் தகவல் ஊடாக களுவாஞ்சிக்குடியில் உள்ள நகை அடகு பிடிக்கும் நிலையத்துக்குச் சென்று அடைகு வைக்கப்பட்ட மூன்று மாலைகள், தாலிக் கொடி, அட்டியல் மற்றும் பதக்கம் உட்பட சுமார் 10 பவுனும் 3 கிராம் நகை மீட்கப்பட்டுள்ளது. 

திருக்கோவில் மங்கமாரி அம்மன் கோயில் மற்றும் தம்பிலுவில் முனையூர் காளிகோயில் என்பனவற்றிலும் அண்மையில் தங்க நகைகள் திருடப்பட்டதாகவும், இக்கொள்ளைச் சம்பவத்துக்கும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தள்ளனர்.