இளஞ்செழியன் மீதான சூடு, கண்டிக்கிறது த.தே.கூ



யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டிப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, கூட்டமைப்பின் ஊடகத் தொடர்பாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில், "யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
"இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து, சட்டத்தின் முன் கொண்டுவரவேண்டும் எனவும், இதற்குப் பின்னணியில் இருக்கக் கூடிய சதித்திட்டங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், பொலிஸ்மா அதிபரை நாம் கேட்டுக்கொள்கிறோம்.
"நீதி நிர்வாகத்தில் ஈடுபட்டிருப்போர் மீது இவ்வாறான வன்முறை பிரயோகிக்கப்படுவதை, நாம் கடுமையாகக் கண்டிக்கும் அதேவேளை, யாழ். குடாநாட்டில் அதிகரித்துவரும் குற்றச் செயல்கள், இப்போது இன்னுமொரு படிநிலையை அடைந்துள்ளமையானது, எமது ஆழ்ந்த கவனத்தை ஈர்க்கிறது.
"சட்டம் ஒழுங்கு சீர்குலைவதில் பயன் காணக்கூடியவர்கள், இப்படியான செயல்களின் பின் மறைந்திருக்கிறார்களா என்ற சந்தேகம், வலுவாக எழுகின்றது.
"இந்த நிலைமை உடனடியாக சீர் செய்யப்பட வேண்டும் என்றும், இதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் அத்தியாவசியமானது என்பததையும், நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது