இளஞ்செழியன் மீதான தாக்குதல் நீதித் துறைக்கு விடுக்கப்பட்ட சவால்



யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல் முயற்சிக்கு அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்து  எதிர்ப்பு பேரணியில் ஈடுபடவுள்ளது. 

இது தொடர்பாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்த நாம் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியதோடு இதனை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். 

இலங்கையின் நீதிபதி ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலைமை என்பது தற்காலத்தை அளவிடக் கூடிய ஒரு எடுகோளாகவே விளங்குகின்றது. 

இந்த சம்பவமானது நீதித்துறைக்கு மட்டுமன்றி நீதியை நிலைநாட்ட விளையும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர் போன்றோருக்கும் விடுக்கப்பட்ட ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. 

நீதித்துறையின் மீது விழுந்த பேரிடி என்றே கருதுகின்றோம். இத் தாக்குதல் சம்பவமானது நன்கு திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினையே காட்டி நிற்கின்றது. 

இதன் மூலம் இலங்கையில் அண்மைக் காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் தொடர் அச்சுறுத்தல்கள் பற்றி உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. 

இந்த நிலைமையை புலப்படுத்தும் நோக்கில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முகமாக கண்டணப் பேரணிகள் நாளை மறுதினம் நடத்தப்படவுள்ளன. 

இக்கண்டனப் பேரணியில் மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள், சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள்,பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார்கள்;, நலன்விரும்பிகள் என அனைவரும் கலந்து எமது எதிர்ப்பினை ஒன்றிணைந்து வெளிப்படுத்துவோம். 

பேரணி தொடங்கும் இடங்கள்:- 

1. அம்பாறை:- கல்முனை மனித உரிமை ஆணையகத்திற்கு அருகாமையில். 
2. மட்டக்களப்பு:- காந்தி பூங்கா 
3. திருகோணமலை:- கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு அருகாமையில் 
4. மன்னார்:- கச்சேரிக்கு அருகாமையில் 
5. வவுணியா:- கச்சேரிக்கு அருகாமையில் 
6. கிளிநொச்சி:-டிப்போ சந்தி, கிளிநொச்சி. 
7. முல்லைத்தீவு:-கச்சேரிக்கு அருகாமையில் 
8. யாழ்ப்பாணம்- கச்சேரிக்கு அருகாமையில். 

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு.