கார் அதிசக்தி வாய்ந்த மின்சார கம்பத்தூணுடன் மோதி விபத்து



(க.கிஷாந்தன்)
அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பதுபொல எனும் இடத்தில் 31.07.2017 அன்று காலை 10.40 மணியளவில் கார் ஒன்று அதிசக்தி வாய்ந்த மின்சார கம்பத்தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் நான்கு பேர் படுங்காயம்பட்டு கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த கார் கட்டுநாயக்கவிலிருந்து கினிகத்தேனை அலகல பகுதியை நோக்கி செல்லும் வழியிலேயே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டதன் காரணமாக இவ்விபத்து  நேர்ந்திருக்கலாம் என  விசாரணைகளை மேற்கொள்ளும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் காரில் பயணித்த 50 வயது மதிக்கதக்க பெண் ஒருவரும், மூன்று இளைஞர்களும் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

மேற்படி கார் அதிசக்தி வாய்ந்த மின்சார கம்பத்தூணுடன் மோதுண்டதனால் மின்சார கம்பம் சேதத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் அப்பிரதேசத்திற்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும், அதனை சீர் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கினிகத்தேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.