அனைத்தையும் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும்



கிழக்கு மாகாணத்தில் அரச ஊழியர்களின் ஊதியங்களுக்காக 16 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக கிழக்கு மாகாணசபையின் ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். 

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பெண்கள் பாடசாலையான வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கோலாகலமான முறையில் நடைபெற்றது. 

பாடசாலையின் அதிபர் திருமதி கனகசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபையின் ஆளுனர் ரோஹித போகொல்லாகம கலந்துகொண்டார். 

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் கி. தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம், விசேட அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.நிசாம் மற்றும் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுனர், 

இந்த நாட்டில் ஒருவரை ஒருவர் மதிக்கும் சூழல் ஏற்பட்டு வருகின்றது. அதற்கான நடவடிக்கைகளை இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வருகின்றார். இன்று அனைத்து இனக்குழுமங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 

அனைத்தையும் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக செயற்பட்டு வருகின்றோம். ஒவ்வொருவரினது பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி என்பது முக்கியமான பகுதியாக இன்று இருந்து வருகின்றது. 

கிழக்கு மாகாணத்தில் கல்வியை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளார். 

அதனைப்போன்று கிழக்கு மாகாணத்தில் நல்ல ஆளுமைமிக்க கல்வியமைச்சரைக் கொண்டுள்ளோம். கிழக்கு மாகாணத்தில் அனைவரும் இணைந்து கல்வியை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். 

கிழக்கு மாகாணத்தில் 1170 பாடசாலைகள் உள்ளது. 30தேசிய பாடசாலைகள் உள்ளன. கல்விக்காக அதிகளவான பணம் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. கிழக்கு மாகாண நிர்வாகத்தில் 40 ஆயிரம் அரச உத்தியோத்தர்கள் சேவையாற்றுகின்றனர். அதில் 20 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக உள்ளனர். 

கிழக்கு மாகாணசபையில் சம்பளம் வழங்குவதற்காக வருடாந்தம் 16 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. அவற்றில் 08 பில்லியன் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படுகின்றது. 

இவ்வளவு நிதியொதுக்கீடு செய்யப்படுகின்ற போதிலும் கல்வியின் வெளியீடு போதாத நிலையிலேயே இருக்கின்றது. இது தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் பணிப்பாளருடனும் கலந்துரையாடியுள்ளேன். அந்தவகையில் சிறந்த பெறுபேற்றை எமக்கு இந்த வின்சன்ட் தேசிய பாடசாலை பெற்றுத்தருகின்றது. 

ஆசிரியர்கள் மாணவர்களுடன் நேரத்தினை செலவிட்டு அவர்களிடம் உள்ள குறைபாடுகளை இனங்கண்டு அதனை நிவர்த்திசெய்து அந்த மாணவனை பலமானவராக மாற்றவேண்டும். இதன்மூலமே நாங்கள் கல்வியில் வளர்ச்சியை காணமுடியும் என்றார்.