நோர்வூட் நிவ் வெளி தமிழ் வித்தியாலயத்தில் புதிய கட்டடம்



(க.கிஷாந்தன்)

இந்த நாட்டில் சிறுபான்மை இனமாகிய தமிழர்களும், மூஸ்லீம்களும் ஆட்சி அமைக்க முடியாது. ஆனால் ஆட்சியாளர்களிடம் பேசிய எதையுமே சாதிக்க முடியும். சிறுபான்மை இனமான தமிழர்களுக்கும், மூஸ்லீம்களுக்கும் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆட்சியாளர்களிடம் பேசி தீர்மானிக்க ஒற்றுமை அவசியம். அந்தவகையில் தமிழர்களுக்கிடையிலும், மூஸ்லீம்களுக்கிடையிலும் உள்ள இரு தலைவர்களும் ஒற்றுமைப்பட வேண்டும் என மத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் அபிவிருத்தி, தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்தார்.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அவர்களின் ஆலோசனைக்கமைய மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் 4.8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நோர்வூட் நிவ் வெளி தமிழ் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா 28.09.2017 அன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், வலய கல்வி பணிப்பாளர், கோட்ட கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“மியான்மார் றோகிஞ்சா அகதிகளுக்கு இலங்கையில் அடைக்கலம் கொடுப்பதில் கடந்த இரண்டு தினங்களாக கொழும்பில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இது அணைவராலும் பேசப்படுகின்ற ஒரு விடயமாக அமைந்துள்ளது. நாமும் ஒரு காலத்தில் அநாதைகளாக நாடு கடந்து சென்றுள்ளோம். அதேபோன்று யுத்த காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு பகுதியிலிருந்து பலர் எமது பகுதிகளுக்கும் வருகை தந்தனர். அவர்களுக்கு நாம் அடைக்கலம் கொடுத்ததுடன், அவர்களுள் பயங்கரவாத செயலில் ஈடுப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை.

இன்று சமூக ரீதியாக சிறுபான்மை இனத்தவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளது. உதாரணமாக இந்த நாட்டு மக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு மாணவிக்கு நேர்ந்த கொடூரமான செயலுக்கான தீர்ப்பு கிடைக்கப் பெற்றது.

அது புங்குடுதீவு மாணவியான வித்தியாவுக்கு ஏற்பட்ட கொடூரமான செயலாகும். இந்த கொடூர செயலில் ஈடுப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தான் இந்த நாட்டில் உள்ள தற்போதைய சட்டங்கள். இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வித்தியாவின் குடும்பத்தாரை சந்தித்து இந்த கொடூர செயலுக்கான நல்ல தீர்வை பெற்றுத் தருவேன் என்றார். அதேபோன்று உரிய தீர்ப்பு கிடைத்து விட்டது. இவ்வாறாக பல்வேறு பிரச்சினைகள் நமது சமூகத்தில் தோன்றியுள்ளது. வடக்கில் முக்கிய தலைவர்கள் பலர் இருந்த காலத்தில் ஒரு நல்ல தலைவரும் இருந்தார். அவரை இழந்ததன் பின்னே இந்த பாடசாலை மாணவிக்கு இந்த கொடூர செயல் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவ, மாணவிகள் நம்மில் ஒரு பெரிய சமூகம். இந்த சமூகத்தை நாமே இழிவுப்படுத்தினால் எதிர்காலம் எவ்வாறாக இருக்கும் என்பது ஒரு கேள்விக்குரியாகவே இருக்கின்றது. அபிவிருத்தியிலும், முன்னேற்றத்திலும் மேலோங்க முடியாத நிலை ஏற்படும்.

இந்த நாட்டை பொருத்த வரையில் சிறுபான்மை இனமான தமிழர்களும், மூஸ்லீம்களும் ஆட்சிக்கு வர முடியாது என்பது தெரிந்த விடயமாகும். இந்த நிலையில் நம் சமூகத்தில் ஒற்றுமையை வளர்த்தெடுக்க சிறுபான்மை இன தலைவர்கள் ஒன்றுப்பட்டு ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படும் போது சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக உருவாகும் பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்களிடம் பேசி தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.