தனது கெளரவத்துக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கோடு, தொடர்ச்சியாக Tamilletter இணையம் செய்திகளை வெளியிட்டு வருவதனால், அதற்கெதிராக நான் அக்கரைப்பற்று பொலீஸ் நிலையத்தில் 06.09.2017 ம் திகதி புதன்கிழமை முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளதாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் ஹனீபா மதனி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில்,
தான் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும், அதற்கான பேரம் பேசுதலாக அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் பதவியைக் கோரியதாகவும், அதற்கு தேசிய காங்கிரஸ் தரப்பு இணங்கவில்லையென்றும் பதிலீடாக பிரதி மேயர் பதவி தருவதாக உறுதியளித்ததாகவும் மேற்படி இணையச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த செய்தியானது அரசியல் வங்குரோத்து நிலையை அடைந்த ஒரு சில விசமிகளால் வலிந்து கட்டவிழ்த்து விடப்பட்ட மாபெரும் பொய்யென்பதனை மக்கள் நன்கறிவர்.
கலைக்கப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித்தலைவராக தான் பதவி வகித்ததுடன், ஶ்ரீ. மு.காங்கிரஸ் கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளராக மிக நீண்ட காலமாக காத்திரமுடனும், நம்பகத்தன்மையுடனும் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட ஹனீபா மதனி, இதனை ஜீரணிக்க முடியாத பினாமிகளாலேயே இச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஶ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் புதிதாக உள் நுழைந்து கொள்பவர்கள் இவ்வாறான பதவிகளை தலைமைத்துவத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்குப் பயன்படுத்தும் ஒரு வகை இழிவான குள்ளநரித்தந்திரமாக நான் இதைப்பார்க்கின்றேன் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இணையத்தளத்துக்குப் பொறுப்பானவர் இது போன்று பல செய்திகளை கடந்த காலங்களிலும் பிரசுரம் செய்துள்ளார். இதனூடாக எனது அரசியல் பயணத்திற்கு களங்கத்தைக் கற்பிக்க முயற்சிப்பதுடன், பொது மக்கள் மத்தியில் எனக்கிருக்கும் நற்பெயரையும் அழித்து விடலாமென்று நற்பாசை கொண்டுள்ளார்.
எனது அரசியல் பயணம் அற்பத்தனமான ஒன்றல்ல. அது இப்பிராந்தியத்தில் மிக நீண்டகாலமாக நான் ஆற்றிய சமூகப்பணிக்கு கிடைத்த ஓர் அங்கீகாரமாகும். குறுகிய மனம் படைத்தவர்களும், காழ்ப்புணர்ச்சியுள்ளவர்களும் அரசியலைப் பிழைப்பாகக் கொண்டவர்களும் சிந்திப்பதற்கு மாற்றமான ஓர் எதார்த்தத்தை எனது அரசியல் கொண்டிருக்கின்றது என்பதனை இவர்கள் புரிந்து கொள்தல் வேண்டுமென்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செய்தியைப் பிரசுரித்த சம்பந்தப்பட்ட இணையத்தள தரப்பு உண்மைத்தன்மையை நிரூபிக்க முன்வருதல் வேண்டும். தவறும் பட்சத்தில் கெளரவத்துக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக மான நஷ்டஈடு வழக்குப்பதிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அஷ்ஷேய்க் ஹனீபா மதனி மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment