பலாலிக்கு பதில் தலைமன்னார் அழைத்துச்சென்ற விமானியின் அனுமதிப்பத்திரம் இரத்து





அமைச்சர் மஹிந்த அமரவீர பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் செல்லப் பயன்படுத்திய ஹெலிகொப்டரை செலுத்திய விமானியின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணத்தின் போது ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை விமானியின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம். நிமலசிறி தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக  கடந்த (14) தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றில் இரத்மலானையில் இருந்து பலாலி நோக்கிப் பயணித்துள்ளார்.
கொழும்பில் இருந்து ஒரு மணித்தியாலத்தில் வான்வழி மூலம் பலாலியை அடைய முடியும் என்ற போதிலும், அமைச்சர் பயணித்த ஹெலிகொப்டர் ஒரு மணித்தியாலம் தாண்டி வானில் தலை மன்னார் திசையில் பயணித்துள்ளது.
இதனால் அமைச்சர் தனது பாதுகாப்பு அதிகாரி ஊடாக விமானியிடம் வினவியுள்ளார்.
பலாலி செல்வதற்கான வழியை தான் தவற விட்டுவிட்டதாகவும் சரியான வழி தனக்குத் தெரியாது எனவும் விமானி தெரிவித்துள்ளார்.
பின்னர் அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கூகுள் வரைபடத்தின் உதவியுடன் விமானிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் ஹெலிகொப்டர் பலாலி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
தரையிறங்கும்போது ஹெலிகொப்டரில் எரிபொருள் நிறைவடையும் நிலையில் இருந்துள்ளது.