(NISHAANTHAN)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முக்கிய விசுவாசிகள் சுதந்திரக் கட்சியில் இணைந்து வருகின்றனர். அதேபோல், சு.கவின் சில முக்கிய தலைகளும் மஹிந்தவின் பக்கம் தாவிவருகின்றனர். அரசின் பிரதான அங்கமாக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் சு.கவின் பக்கம் தாவிவருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சு.கவுடன் இணைந்துள்ளனர். கட்சியின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க, அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பியசிறி விஜயநாயக்க மற்றும் துணைப் பிரதி செயலாளரான நிமல் பிரமவங்ச ஆகியோர் அதிரடியாக அண்மையில் சு.கவின் பக்கம் தாவியிருந்தனர்.
இந்த விடயம் விமல் வீரவங்சவுக்கு மாத்திரமல்ல, மஹிந்தவுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்திருந்தது. இதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த கீதா குமாரசிங்கவின் பதவி பறிபோனதற்கு பதிலீடாக அவ்விடத்திற்கு பியசேனா
கமகே நியமிக்கப்பட்டதுடன், தெற்கு அபிவிருத்தி மற்றும் சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சுப் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது.
கமகே நியமிக்கப்பட்டதுடன், தெற்கு அபிவிருத்தி மற்றும் சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சுப் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது.
மறுபுறத்தில் பிரதி அமைச்சராகவிருந்த நிமால் லன்சா, பதவியை இராஜினாமா செய்ததுடன், கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்தார். அதேபோல், கடந்த மாதம் பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவும் மஹிந்த பக்கம் தாவியிருந்தார்.
எனினும், 2015ஆம் ஆண்டு பறிபோன மக்கள் பலத்தை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் மஹிந்த எடுத்துவரும் முயற்சிகளை சிலரின் தாவல் பெருத்த ஏமாற்றமாக மாற்றியுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறமுன்னர் எத்தனை போர் எங்கெங்கு தாவப்போகின்றனர் எனக் கூறமுடியாத சம்பவங்களே அரங்கேறிவருகின்றன. மஹிந்த மைத்திரி தரப்பை இணைக்க முன்னெடுக்கப்பட்ட பேச்சுகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால் சு.க ஏமாற்றமடைந்திருந்தது.
மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கைகளுக்கு மைத்திரி தலை சாய்க்கவில்லை என்பதாலேயே பேச்சுகள் தோல்வியில் முடிவடைந்திருந்தன. பேச்சுகள் தோல்வியில் முடிவடைந்திருந்தாலும், தொடர்ந்து இடம்பெற்றுவரும் சம்பவங்கள் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியுள்ளன.
தேசிய சுதந்திர முன்னணியை போன்று பொதுஜன பெரமுனைக்கு ஆதரவளித்துவரும் பல கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து சு.கவின் பக்கம் பல்டி அடித்த வண்ணமுள்ளனர். பல்டிகள் ஒரு புறம் இடம்பெறும் அதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து தேசிய அரசை அமைக்க ஐ.தே.கவுடன் சு.க. ஏற்படுத்திக்கொண்ட தேசிய அரசு குறித்த ஒப்பந்தம் இன்று (31/12/2017) காலாவதியாகவுள்ளது. இதனை புதுப் பிக்க சில முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் தேசிய அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளாலேயே இருதரப்பிலும் தேசிய அரசுக்கு எதிராக பலர் கிளம்பியுள்ளனர். அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஐக்கிய தேசியக் கட்சி தனி ஆட்சியை அமைத்தால் அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பொது எதிரணியின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் எனக் கூறியுள்ளார்.
சமகால அரசியல் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டே ஐ.தே.கவின் முக்கிய தலைவர்கள் தனி அரசை அமைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். தேசிய அரசுக்கு எதிரான கருத்துகளை சு.கவின் சிலர் தெரிவித்து வருகின்ற போதிலும், ஐ.தே.கவை தனித்து ஆட்சியமைக்க விடமாட்டோமென சு.க. எச்சரிக்கை விடுத்துள்ளது. 2020ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டே இரண்டு கட்சிகளும் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
தேசிய அரசில் ஐ.தே.கவுடன் சு.க உறவு கொண்டாடி வருகின்ற போதிலும் ஐ.தே.கவுடன் தொடர்ந்து பயணிக்கும் எண்ணத்தில் ஜனாதிபதியும் இல்லை என்பதே யதார்த்தம். 2020 ஆம் ஆண்டு சு.கவின் அரசை அமைக்கும் பயணத்தையே தாம் முன்னெடுத்துவருவதாக ஜனாதிபதி பலமுறை கூறிவிட்டார். வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனையுடனேயே கூட்டணி வைப்போம் என்று அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார்.
அத்துடன், ஐ.தே.கவுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம். தேர்தலில் தனியாக போட்டியிடப் போகிற போதிலும், இரு கட்சிகளும் இணைந்து 55 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியும். அதன் அடிப்படையில் கூட்டணி அரசை அமைப்போம் என்றும் கூறியுள்ளார். இவர் போன்றுதான் ஐ.தே.கவுடன் தொடர்ந்து பயணிக்க சு.கவில் எந்தவொரு அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும் விருப்பமில்லை.
ஆனால், தமது பலத்தை மக்கள் மத்தியில் பாதுகாத்துக்கொள்ளவும், வாக்குகளை மஹிந்தவுக்கு பறிகொடுக்காமல் பாதுகாத்துக்கொள்ளவும் அரச பலம் சு.கவுக்கு தேவையென்பதால் தேசிய அரசின் பங்காளியாகத் தொடர்கிறது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்த சு.கவின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டிருந்த இராஜங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, கடந்த 28ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதிக்கும் இடையில் தெற்கு அரசியலில் அதிரடியான மாற்றங்கள் இடம்பெறும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இவர் எச்சரிக்கை விடுத்த மறுநாள் முதல் எதிரணியின் முக்கிய தலைவர்கள் சிலரும் ஐ.தே.க, ஜே.வி.பியின் ஆதரவாளர்கள் சிலரும் சு.கவில் இணைந்திருந்தனர். விரைவில் மஹிந்த ராஜபக்ஷவின் முக்கிய விசுவாசியும் அவரது அமைச்சரவையில் அமைச்சரவைப் பேச்சாளருமாகவிருந்த கெஹ்லிய ரம்புக்வெல்லவும் சு.கவில் இணைந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பதற்றமான அரசியல் நிலையில் நேற்று சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் குறித்த விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பின்னர் எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தெற்கு அரசியலில் அதிரடியான சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்று தொடர்ச்சியாக கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
நல்லாட்சி அரசு அமையப்பெற்று மூன்று வருடங்களை எட்ட இன்னமும் எட்டு நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில் 2015ஆம் ஆண்டு 8 ஆம் திகதி எவ்வாறான சூழல் நாட்டில் காணப்பட்டதோ அதே பதற்றம் இன்றும் நிலவுகிறது.
பிணைமுறி விவகாரத்திற்கு எதிராக கட்டாயம் சட்டம் நிலைநாட்டப்படும் என்று ஜனாதிபதி, கடந்த வியாழக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்த சு.கவின் மாநாட்டில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அத்துடன், எனது வாள் வீச்சுப்பயணத்தில் நண்பரோ,எதிரியோ, உறவினரோ எவர் வேண்டுமானாலும் வாளுக்கு இரையாகலாம் என்று கடும் தொனியில் கருத்து வெளியிட்டிருந்தார். சு.கவை வலுப்படுத்தும் அதேவேளை, பிணைமுறி விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள ஐ.தே.கவின் முக்கிய தலைவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வகையில் ஜனாதிபதியின் வியூகம் அமைந்துள்ளதால், கொழும்பு அரசியல் எந்நேரமும் கொதிநிலையிலேயே கடந்த சில வாரங்களாக தொடர்கிறது.
தேர்தல் நெருங்க, நெருங்க சு.கவின் பலம் அதிகரித்த வண்ணம் உள்ளதுடன், தேர்தலில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐ.தே.கவின் பலமும், சு.கவுக்கு கடும் போட்டியை கொடுக்குமென பரவலாக பேசப்படும் மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியின் பலமும் வீழ்ந்துகொண்டே வருகிறது. ""எனக்கு பின்னர் சுதந்திரக் கட்சியின் தலைமை நாட்டு மக்களுக்கே உரித்துடையதென'' ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்தானது பலரை கதிகலங்க வைத்துள்ளது.
குறிப்பாக மறைமுகமாக ஐ.தே.கவின் முக்கிய தலைமைகள் மீது ஜனாதிபதி அடைந்துள்ள கடும் அதிருப்தியின் வெளிப்பாடே இவரின் அண்மைக்காலப் பேச்சுகளில் மறைமுகமாக வெளிப்படுகின்றன.
முன்னாள் இந்நாள் என பல முக்கிய தலைவர்கள் சு.கவுக்கு தமது நேரடியான ஆதரவை வழங்கிவருகின்றனர். ஆட்சிமாற்றத்தின் பின்னர் சு.கவின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும் முதலாவது தேர்தலும் இதுவாகும். 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்றிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி நடுநிலைமையே வகித்திருந்தார். நேரடியாக இம்முறை அவர் சு.கவின் தேர்தல் மேடைகளுக்குத் தலைமை தாங்குவதால் வெற்றிபெற்றுக் காட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
பிணைமுறி விவகாரம் ஐ.தே.கவுக்கும் கடும் அச்சுறுத்தலான விடயமாக மாறியுள்ளதால், ஐ.தே.கவுக்கும் பாதகமான வகையில் பிணைமுறி அறிக்கையும் அமையுமானால் கட்டாயம் தேர்தல் களம் எதிர்பாராத திருப்புமுனைகளை சந்திப்பது நிச்சயம். மஹிந்த தரப்பை பிரித்து சு.கவின் வாக்குகளை சிதறவிடுவதன் மூலம் தேர்தலில் பெரும்பான்மை பலத்தை பெறலாம் என்பதே ஐ.தே.கவின் நீண்டகாலக் கனவாக இருந்துவருகிறது. அதற்கு ஏற்றாற் போல் மஹிந்த தரப்பு நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கும் பிரசாரங்களுக்கு ஐ.தே.கவால் எவ்வித இடையூறும் ஏற்படுத்தப்படுவதில்லை.
கடந்த அரசின் காலத்தில் இடம்பெற்ற ஊழல்களை மூடி மறைக்க ஐ.தே.கவுடன் ஒப்பந்தமொன்றை செய்துகொண்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான அரசியல் செயற்பாட்டாளருமான பஸில் ராஜபக்ஷ செயற்பட்டுவருவதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டை சு.க அவர்மீது அடுக்கி வருகிறது.
ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஐ.தே.கவின் தலைமைத்துவத்தில் ஏற்படுத்தப்பட்டுவரும் ஜனநாயக ரீதியான மறுசீரமைப்புகளும் சிறந்த வரவேற்பு உள்ளதுடன், கடந்த அரசு மீது இருந்த சர்வதேச அவநம்பிக்கையை உடைத்தெறிந்துள்ளதால் மக்களிடம் ஐ.தே.க ஒரு நன்மதிப்பை பெற்றுள்ளது. தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண முனைப்புடன் ஐ.தே.கவின் தலைமைத்துவம் செயற்பட்டுவருவதால் சிறுபான்மை மக்கள் மத்தியிலும் ஐ.தே.கவுக்கு கடந்த காலத்தை போன்று ஆதரவு உள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐ.தே.கவின் தலைமைத்துவத்திலேயே இ.தொ.கா.,ஈ.பி.டி.பியை தவிர்ந்த ஏனைய முக்கிய சிறுபான்மைக் கட்சிகள் போட்டியிடுகின்றன.
பிணைமுறி விவகாரத்தில் சிக்கியுள்ள ஐ.தே.கவின் தலைவர்கள் மீது குற்றச்சாட்டு ஊர்ஜிதமானால் தெற்கு அரசியலை தடம் தெரியாது மாற்றிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்களும் தேர்தல் புது வருடம் என்பவற்றை தாண்டி, அடுத்துவரும் சில நாட்களில் ஏற்படப் போகும் அரசியல் ரீதியான மாற்றங்களையே உற்றுநோக்கிவருகின்றனர். அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியது போன்று, எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அதிரடி மாற்றங்கள் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சு.நிஷாந்தன்


Post a Comment
Post a Comment