ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம் கடந்த சனிக்கிழமை சிரியாவில் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளபோதிலும், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் மீது சிரியா அரச படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள கிழக்கு கூட்டாவில் நடந்த தாக்குதல்களில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
"எவ்வித தாமதமுமின்றி" 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம் வெளியிட்ட பிறகு வான் தாக்குதல் மட்டுமல்லாது, தரைத் தாக்குதலும் நடந்துள்ளது.
தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை சிரியா அரசாங்கம் மதித்து செயல்படுமாறு வலியுறுத்த வேண்டுமென்று ரஷ்யாவிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் வலியுறுத்தியது.
AFP
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவ வேண்டுமென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் கூட்டு தொலைபேசி உரையாடல் மூலமாக ஜெர்மயின் அதிபர் ஏங்கலா மெர்கல் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் கேட்டுகொண்டனர்.
தொடர்ச்சியாக போர் நடைபெற்றுவரும் சிரியாவில் உதவிப் பொருட்கள் வழங்கவும் மருத்துவ ரீதியான தேவை உடையவர்களை வெளியேற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்ட 30 நாள் போர் நிறுத்த அறிவிப்பை ஐ.நா பாதுகாப்பு அவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆனால், மிகப் பெரிய ஜிகாதி குழுக்களும் அவர்களின் கூட்டாளிகளும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்தின் கீழ் வரவில்லை.
சிரியாவின் தலைநகர் டாமஸ்கஸுக்கு அருகியுள்ள கிழக்கு கூட்டா பிராந்தியம்தான் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள கடைசி மிக முக்கிய பிராந்தியமாகும்.


Post a Comment
Post a Comment