கலாம் நினைவிடத்தில் கமல் : தனது அரசியல் பயணத்தை கலாம் இல்லத்தில் இருந்து துவங்கிய கமல்ஹாசன், மீனவர்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பையடுத்து, கலாம் நினைவிடம் சென்றார். பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் கமல்ஹாசன் மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து மதுரை நோக்கி புறப்படும் கமல்ஹாசன், செல்லும் வழியில் 3 இடங்களில் உரை நிகழ்த்த உள்ளார்.
'பள்ளிக்குச் செல்வதை தான் தடுக்க முடியும். பாடம் படிப்பதை அல்ல' : கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எளிமையான வீட்டில் இருந்து வந்த கலாம். அவர் வீட்டுக்குச் சென்றதில் மகிழ்ச்சி. அதில் அரசியல் ஏதுமில்லை. அவர் உணர்வு, நாட்டுப்பற்று எல்லாம் என்னை கவர்ந்தவை. என் பாடத்தில் ஒரு பகுதி அவரது வாழ்க்கை. அவர் பயின்ற பள்ளிக்குச் செல்ல திட்டமிட்டேன். வேண்டாம் என தடை போட்டு விட்டார்கள். நான் பள்ளிக்குச் செல்வதை தான் தடுக்க முடியுமே தவிர. பாடம் படிப்பதைத் தடுக்க முடியாது. 'தடைகளை வென்றே சரித்திரம் படைப்பவன்' என என் படத்தின் பாடல் வரும். அப்படித்தான் படிக்க வேண்டும் என்றால் அதையும் செய்யலாம்.
'அடைமொழி'யாகும் நம்மவர் : தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், கலாம் இல்லத்தில் துவங்கி தொடர்ந்து மீனவர்களைச் சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்திக்கவிருக்கிறார். இந்நிலையில், கமல்ஹாசனின் நிகழ்வுகள் அனைத்தும் நம்மவர் எனும் அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வருகிறது. மீனவர்களுடனான சந்திப்பு மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு இரண்டுமே 'நம்மவர் - மீனவர்கள் சந்திப்பு', 'நம்மவர் செய்தியாளர்கள் சந்திப்பு' என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.



Post a Comment
Post a Comment