நான் பதவி விலக அவசியமில்லை




அரசியல் யாப்பின் பிரகாரம் தான் பதவி விலக தேவையில்லை என்றும் தொடர்ந்தும் தான் பிரதமராக கடமையற்றுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.



தற்போதைய தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும் எனவும் ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தோற்றம் ஒன்று வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.


அதேவேளை தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்க தாம் தயார் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சற்று முன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி முடித்தார். அதில் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்படி தெரிவித்தார்.
சந்திப்பின்போது சரமாரியாக எழுந்த கேள்விக்கணைகளுக்கு இன்முகம் மாறாமல் பதிலளித்தார் பிரதமர்.
நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி பற்றிக் கேட்கப்பட்டபோது, இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து நடத்தும் ஆட்சி எனும்போது இவ்வாறான பிரச்சினைகள் தோன்றுவது இயல்பே என்று கூறிய அவர், இதுபோன்ற பிரச்சினைகள் எழாவிட்டால் ஊடகங்களுக்கு சுவாரசியம் இல்லாமல் போய்விடுமே என்று குறிப்பிட்டார்.
ஆட்சி மாற்றம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தனது நிலைப்பாட்டை பிரதமருக்கும் தெளிவாக எடுத்தியம்பியிருப்பதாகவும் எனினும் கூட்டாட்சிக்கு பங்கம் வரும் வகையில் எவ்விதமான ஆலோசனைகளோ, முடிவுகளோ எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மஹிந்தவைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மஹிந்த குடும்பத்தினர் மீது நானூறுக்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிந்திருப்பதாகவும் இதன் அடிப்படையில் தாம் மஹிந்தவைக் காப்பாற்றியதாகக் கூறப்படுவது அபத்தமானது என்றும் தெரிவித்தார்.
பிணைமுறி விவகாரமே அண்மைய தேர்தல் தோல்விக்குக் காரணமாக இருந்திருக்குமா என்று கேட்கப்பட்டதற்கு, அந்த விவகாரத்தில் மக்கள் உடனடித் தீர்ப்பை எதிர்பார்ப்பதாகவும் என்றபோதும் சட்ட நடவடிக்கைகளுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாகவும் எதிர்காலத்தில் அந்த வழக்கை விரைந்து முடிக்க பரிந்துரைகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். எவ்வாறெனினும் அந்த விவகாரத்தின் தாக்கம் தேர்தல் முடிவுகளைப் பாதித்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமா என்றும் அதை நீங்கள் எதிர்கொள்ளத் தயாரா என்றும் கேட்கப்பட்டபோது, அப்படியொரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் தமக்கான ஆதரவை மன்றில் காட்ட முடியும் என்று தெரிவித்தார்.
இந்திய விஜயத்தை இரத்துச் செய்தமை குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர், நாட்டின் தற்போதைய சூழலில், அரசில் நடக்கும் விவரங்களைத் தம் மூலமாகத் தெரிந்துகொள்ள உறுப்பினர்களும் மக்களும் ஆவலாக இருப்பதாகவும் இந்த நிலையில் தாம் இந்தியா மட்டுமன்றி எந்தவொரு நாட்டுக்கும் செல்வது பொருத்தமாக இருக்காது என்றும் கூறினார்.
அமைச்சரவையில் எவ்வாறான மாற்றங்கள் கொண்டுவரப்படவிருக்கின்றன என்று கேட்கப்பட்டதற்கு, இன்னும் அது குறித்த ஆலோசனைகளே முன்வைக்கப்பட்டு வருவதாகவும் முடிவுகள் குறித்து போகப் போகத் தெரியும் என்றும் கூறினார்.